![]()

அம்முச்சி 2 – விமர்சனம்
அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்று சொல்வதுதான் பின்னர் பேச்சு வழக்கில் அம்முச்சி என்றாகி விட்டது.
நாயகி மித்ராவுக்கு கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடரவேண்டும் என்று ஆசை. ஆனால் அவளது குடிகாரத் தந்தையோ முரடனும் அடாவடிப் பேர்வழியுமான ஒருவனுக்கு மகளை கல்யாணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்.
நாயகன் அருண் நகரத்திலிருந்து விடுமுறைக்கு கிராமத்தில் இருக்கும் அம்முச்சி வீட்டுக்கு வரும்போது பார்த்துப் பழகிய மித்ராவுடன் காதல் கொள்கிறான். மித்ராவும் அருணைக் காதலித்தாலும், தான் கல்லூரியில் சேர்வதே காதலைக்காட்டிலும் முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறாள்.
மித்ரா அருண் காதலுக்கு உதவுவது அருணின் மாமன் மகனான சசிதான். அருணும் சசியும் கலந்து கட்டி அடிக்கும் கூத்தில் காதலர்களின் குடும்பங்களுக்கிடையே பிரச்னைகள் ஏற்பட்டு விஷயம் பஞ்சாயத்துக்கு வருகிறது.
இறுதியில் ஐந்து போட்டிகள் நடத்தி அதில் அருண் வெற்றி பெற்றால் மித்ராவை திருமணம் செய்து கொடுப்பதாகவும், தோற்றுவிட்டால் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மித்ராவின் தந்தை பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்ல அதற்கு அருணின் மாமா ஒத்துக்கொள்கிறார்.
போட்டிகளில் வெற்றி பெற்றது யார்… காதலர்கள் இணைந்தார்களா என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் அம்முச்சி 2
உருவ கேலி, இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் தரமான ஒரு நகைச்சுவைப் படமாக கொடுத்ததற்காகவே இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியை பாராட்டலாம்.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள்தான் என்றாலும், நன்கு பழக்கப்பட்ட நடிகர்களைப்போல் திறம்பட நடித்திருக்கின்றனர். குறிப்பாக கதாநாயகனுக்கு இணையான சசி என்ற பாத்திரத்தில் வரும் சசி செல்வராஜுக்கு நகைச்சுவை இயல்பாகவே நன்றாக வருகிறது.
அதுவும் மாப்பிள்ளை அருண் வேடத்தில் வரும் அருண் குமாருடன் இணையும்போது இருவருக்குமிடையிலான நகைச்சுவை கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.
சசி என்ற பாத்திரத்தை அருணும் மற்றவர்களும் சசியா என்ற அழைப்பது பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கிறது. கிராமங்களில் இப்படித்தான் சில பெயர்களை சற்றே நீட்டி அழைப்பார்கள்.
எஸ்.ஜே.சந்தோஷ் குமாரின் ஒளிப்பதிவும் விவேக் சரோவின் இசையும் சுமார் ரகம்தான்.
நல்ல நகைச்சுவைப் படம் என்பதால் குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பார்த்து ரசிக்கலாம்.
