![]()
அங்கீகாரம் _ விமர்சனம்
ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தன் வாழ்வையே அதற்காகத் தொலைக்கும் ஒரு தடகள வீரனின் கதைதான் இந்தத் திரைப்படம்.
அதிகார வர்க்கத்தின் வக்கிரங்களுக்குப் பலியாகும் அந்த இளைஞனின் பயணம், நம்மைப் பதைபதைக்க வைக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ்? நெஞ்சை அழுத்தும் பாரம்!
*நடிகர்களின் பங்களிப்பு*
கே.ஜெ.ஆர் (நாயகன்): அறிமுக நடிகர் என்று சொல்லவே முடியாது! ஒரு தடகள வீரருக்குரிய கட்டுக்கோப்பான உடல்வாகு, எதார்த்தமான நடிப்பு என முதல் படத்திலேயே ஸ்கோர் செய்கிறார்.
அம்மா மற்றும் தங்கையிடம் காட்டும் பாசம், அதிகார வர்க்கத்திடம் வெளிப்படுத்தும் கோபம், இறுதிக்காட்சியில் அந்த மெல்லிய வலியை வெளிப்படுத்தும் விதம் என மிரட்டியிருக்கிறார்.
சிந்தூரி விஸ்வநாத்: தடகள வீராங்கனையாகக் கச்சிதமான தேர்வு. தன்னைத் தவறாக அணுகும் ஒருவனை ஒரே அறையில் வீழ்த்தும் காட்சி, இவருடைய ஆளுமையை உரக்கச் சொல்கிறது.
*துணை நடிகர்கள்*
அரசு வழக்கறிஞராக விஜி வெங்கடேஷ், அதிகாரியாக அஜித் கோஷி, அமைச்சராக மன்சூர் அலிகான் என ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைக்கதையை உயிர்ப்பிக்கிறார்கள்.
மன்சூர் அலிகானின் அந்த ‘நீதிமன்ற’ மிரட்டல் காட்சிகள் அரசியல் எதார்த்தத்தின் கண்ணாடி.
*ஜிப்ரானின் இசை* பாடல்கள் கதையோடு பின்னிப் பிணைந்து பயணிக்கின்றன. முக்கியமாக “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடல் ஒருவித சிலிர்ப்பைத் தருகிறது.
பின்னணி இசை படத்தின் ஒவ்வொரு உணர்ச்சியையும் கடத்த உதவுகிறது.
*இயக்குநர் தென்பாதியான்*
முதல் படம் என்று சொல்லவே மாட்டோம்! சமூகத்தின் அநீதியைத் துணிச்சலாகத் திரையில் காட்டியிருக்கிறார்.
திரையில் அரசியல் குறியீடுகள், நீதிமன்ற காட்சிகள் என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார்.
குறிப்பாக, ‘திரை நாயகன் என்றால் அடுத்தவருக்காகப் போராடுபவர்’ என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு சாதாரண இளைஞன் தன் குடும்பத்துக்காக நேர்மையுடன் போராடுவதைக் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.
*வசனங்களின் வீச்சு*
வசனங்கள் ஒவ்வொன்றும் சமூகத்தின் முகத்தில் அறையும் சாட்டை அடிகள்:
“யார் கூடவாவது ஓடிப்போனா கூட ஒன்னும் சொல்லமாட்டாங்கபோல.. விளையாட்டுல ஓடுறதுதான் பிரச்சினையா இருக்கு!”
“நாங்க போட்டிக்கு போனா ஜெயிச்சிருவோம்.. ஆனா போட்டிக்குப் போறதுதான் போராட்டமா இருக்கு!”
*பாராட்டுக்குரிய விஷயங்கள்*
மது, புகை, ஆபாசம் என எந்தத் தேவையில்லாத பிசிறுகளும் படத்தில் இல்லை.
‘கிரிக்கெட்டைத் தாண்டி விளையாட்டுகள் முக்கியம்’ என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
கலை இயக்கம் அற்புதம்; நீதிமன்றமும், சேரிப்பகுதியும் செட் என்று நம்பவே முடியவில்லை.
*பைனல் கமெண்ட்
. சமூகத்தின் போக்கை மாற்றும் இப்படத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

