![]()
கான்சிட்டி _ விமர்சனம்
கான்சிட்டி: அதிரடி, காமெடி, எமோஷன் – ஒரு பக்கா ஃபேமிலி த்ரில்லர்!
திரில்லர் படங்களில் எத்தனையோ ரகங்கள் இருந்தாலும், “ஃபேமிலி த்ரில்லர்” ஜானரே தனி கெத்துதான்.
குடும்பத்தோடு சேர்ந்து செம அதிரடியில் இறங்கினால் எப்படி இருக்கும்? அந்த ஃபீலை அப்படியே கொடுக்க வந்திருக்கிறது ‘கான்சிட்டி’.
பள்ளியில் மகனை பிக்கப் பண்ணப் போகும் அர்ஜுன் தாஸுக்கு அங்கொரு அதிர்ச்சி – மகனைக் கடத்திவிட்டார்கள்!
அங்கிருந்து ஆரம்பிக்கும் அந்த விறுவிறுப்பான சேஸிங், ஒரு பெரிய பண மோசடி கும்பலின் முகத்திரையைக் கிழிக்கிறது.
கடைசியில் அர்ஜுன் தாஸ் தன் பையனை மீட்டாரா? அந்தப் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? – இதுதான் படத்தின் சுவாரஸ்யமான ஒன்-லைன்.
அர்ஜுன் தாஸை சொல்லவா வேண்டும்? வழக்கம்போல கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டார்.
பண நெருக்கடி, காதலியின் அப்பா முன்னால் அவமானம், அதிலிருந்து மீள ஆபத்தான களம் என ஸ்கோர் செய்கிறார். அவருடைய அந்த கம்பீரமான குரலும், ஸ்டைலான எலைட் லுக்கும் படத்திற்குப் பெரிய பிளஸ்.
அன்னா பென் கொடுத்த வேலையை கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்கிறார். உடல்மொழியும், பேசும் ஸ்டைலும் படத்திற்கு நல்ல பலம்.
இனி வடிவுக்கரசி அம்மாவைப் பற்றிப் பேச வேண்டும். இந்தப் படத்தில் அவர் ஒரு புயல்! குறிப்பா அந்த “நீங்க வெயிட் பண்ற நேரத்துல காபி போட்டு வரவா?” சீனில் அவர் காட்டும் டைமிங் காமெடி, தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.
யோகி பாபுவைப் பொறுத்தவரை, கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். வடிவுக்கரசியுடன் இருக்கும் காட்சிகளில் அவர் பேசாமல் இருந்தாலே படம் இன்னும் ரசனையாக இருந்திருக்கும்.
கவுண்டர் கொடுக்கிறேன் பேர்வழி என்று அவர் சொல்லும் வசனங்கள், காமெடியையே காலி செய்கிறது.
விடிவி கணேஷ், படம் முழுக்க அதகளம் செய்கிறார். இவருடைய டைமிங் நகைச்சுவை சீனுக்கு சீன் சிரிக்க வைக்கிறது.
ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு இன்னொரு பலம். கிரைம் திரில்லர் என்றாலும், துள்ளலான பின்னணி இசையால் காட்சிகளை உயிர் பெறச் செய்திருக்கிறார்.
அரவிந்த் விஸ்வநாதனின் கேமரா, வீடு முதல் வில்லன் குடோன் வரை எலைட் லுக்கைக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது.
அருள் மோசஸின் எடிட்டிங் படத்தின் வேகத்தைக் குறைக்காமல் கச்சிதமாகக் கொண்டு செல்கிறது.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், திரில்லருடன் காமெடி மற்றும் குடும்ப உறவுகளையும் சேர்த்து ஒரு கலக்கலான பேக்கேஜைக் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ஒரு ஜாலியான மற்றும் விறுவிறுப்பான அனுபவத்திற்கு இந்த ‘கான்சிட்டி’ தாராளமாகப் போகலாம். மிஸ் பண்ணிடாதீங்க!

