![]()

அஞ்சாமை _ விமர்சனம்
இந்தியா முழுதும் மருத்துவ கல்வியில் சேர்வதற்காக ஒன்றிய அரசு, ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை அமல்படுத்தியதை அடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்டபிரச்சினை- அதனால் பறிபோன உயிர்கள் – பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த விவகாரத்தை பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறது அஞ்சாமை திரைப்படம்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராமத்தில் வாழ்கிறது ‘சர்க்கார்’ என்பவரது எளிய விவசாய குடும்பம். சர்க்காரின் மகன், அருந்தவம் மருத்துவம் படிக்க விரும்புகிறார். அதற்காக புதிய நுழைவுத் தேர்வு ( நீட்) எழுத வேண்டிய கட்டாயம். தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம் கேட்டவருக்கு, ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையம் கிடைக்கிறது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர், தனது தந்தை சர்க்காருடன் ஜெய்ப்பூர் புறப்படுகிறார். கடைசி நேரத்தில் தேர்வு உத்தரவு வந்த காரணத்தால் ரயிலில் இடம் கிடைக்கவில்லை. படாதபாடுபட்டு – நொந்து நூலாகி – ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கும் ஏகப்பட்ட கெடுபிடி.
அந்த மாணவர் தேர்வை எழுத.. தந்தை சர்க்கார் அசதியில், தண்ணீர் பாட்டில் வாங்க பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வருகிறார்.
அதன் பின் நடப்பதெல்லாம் அதிர்ச்சிகரமான சம்பவம்.
எளிய விவசாயி… அன்பான குடும்பத் தலைவன்.. பாசமான தந்தை என நிஜமாகவே வாழ்ந்து இருக்கிறார் விதார்த். நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதை அறியும் அவர், பதறிப்போய் துடிப்பது. சீலிங் மின் விசிறிக்கு பதிலாக, டேபிள் பேன் வாங்குவது, கிணற்றுக்கு கம்பி வேலி போடுவது என ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்து இருக்கிறார் விதார்த். அதுவும் அந்த இறுதிக் காட்சியில்.. மனம் பதற வைக்கிறார்.
அட.. வாணி போஜனா இது? வளர்ந்த இரு பிள்ளைகளுக்கு தாயாக, குடும்பத் தலைவியை கண் முன் நிறுத்துகிறார். பிள்ளைகளின் படிப்புக்காக கணவனிடம் சண்டை போடும் காட்சி ஓர் உதாரணம்.
இவர்களது மகனாக நடித்துள்ள கிரித்திக் மோகன் நடிப்பும் சிறப்பு. தனது தாயைப் பற்றி பொய்யாக, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கூறும்போது கண்ணில் காட்டும் அதிர்ச்சி அற்புதம்.
காவல் அதிகாரியாக வந்து, பிறகு பணியை துறந்து வழக்கறிஞர் அவதாரம் எடுக்கும் நல்ல உள்ளம் கொண்டவராக வந்து நடிப்பில் அசத்துகிறார் ரகுமான்.
கார்த்திக்கின் ஒளிப்பதிவு இயல்பாக, களத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. கிராமத்து காட்சிகளிலும் சரி, ஜெய்ப்பூர் காட்சிகளிலும் சரி கவனம் ஈர்க்கிறது கார்த்திக்கின் கேமரா.
ராகவ் பிரசாத்தின் இசை, படத்துக்கு பலம். வசனங்கள் இல்லாத இடத்திலெல்லாம், உணர்வுகள் அற்புதமாக வெளிப்படுத்துகிறது.
நம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பட்ட இன்னல்களையும், இந்த நீட் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர்கள் எப்படி பணம் சம்பாதித்தன என்பதையும் அப்படியே பட்டவர்த்தனமாக, அதேசமயம் மிகவும் யதார்த்தமாக தோலுரித்து காட்டும் விதமாக முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன்.
படத்தின் அச்சு, முதல் பாதியில் தனது மகனுக்காக நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளின் காலில் சர்க்கார் (விதார்த்) விழும் காட்சிதான். அந்த காட்சி கண்களை குளமாக்குகிறது. நெஞ்சை உலுக்குகிறது. “இப்படித்தானே நமது மாணவர்கள், அவர்களது பெற்றோர்களும் நீட் தேர்வின் போது படாதபாடுபட்டு இருப்பார்கள்” என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது இந்தக் காட்சி.
இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரகுமான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், இந்த மக்கள் நமது அரசாங்கத்தின் முன்வைக்கும் நியாயமான கேள்விகளே.
அரசு, அமைச்சர், அதிகாரிகளின் அலட்சியம்… மக்களின் வேதனையை உணர்த்தும் வசனங்கள்அவை.
சமூக பொறுப்புள்ள படத்தை தயாரித்த தயாரிப்பாளர் திருச்சித்திரம் பாராட்டுக்கு உரியவர்.
நல்ல படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸுக்கும் வாழ்த்துகள்.
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம் அஞ்சாமை.
மதிப்பெண் 4.5/5

