அறம் செய் _ விமர்சனம்
சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறது அரசாங்கம்.
இதை எதிர்க்கும் மாணவ மாணவிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த தொடங்குகிறார் பாலு எஸ்.வைத்தியநாதன்.
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு ஆட்சி மாற்றம் அல்ல… அதிகார மாற்றம் மட்டுமே என்ற தீர்க்கமான முடிவுடன் ‘அறம் செய்’ என்ற அமைப்பின் கீழ் அஞ்சனா கீர்த்தி ஒரு குழுவினருடன் போராட்டத்தை துவக்குகிறார்.
இந்த இரண்டு வகை போராட்டங்களும் இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று அரசுடைமை ஆக்கப்படுவதும், பின்னர் நடைபெறும் ஆட்சி மாற்றத்தால் அது மீண்டும் தனியாருக்கே செல்வதும் சில காலத்திற்கு முன்பு நாம் பார்த்த சம்பவங்கள் தான்.
இது போன்ற சம்பவங்கள் மட்டுமின்றி வசனங்கள் பலவும் சமகால அரசியலை நினைவூட்டுகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றை பார்க்கலாம்…
ரயில் கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த பணத்தை பற்றியும், லாரிகளில் வந்த ரூபாய் நோட்டு கட்டுகள் யாருடையது அவை எங்கு சென்றன என்பது பற்றியும் துணிச்சலான கேள்விகளை படத்தின் வசனங்கள் கேட்கின்றன.
அறம் செய் படத்துக்கு கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் பாலு எஸ். வைத்தியநாதன் திலீபன் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் வேடம் ஏற்று சிறப்பாகவே நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டதற்காகவே அவரை தாராளமாக பாராட்டலாம். சாமானிய இந்திய மக்கள் கஷ்டப்பட்டு வங்கியில் சேர்த்த பணத்தை விஜய் மல்லையாவும் நீரவ் மோடியும் கடன் என்ற பெயரில் வாங்கி ஏப்பம் விட்டு விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றதையும் சவுக்கடி வசனங்கள் கேள்வி கேட்கின்றன.
அறம் செய் அமைப்பின் பொறுப்பாளராக வரும் அஞ்சனா கீர்த்தி, தான் ஏற்றிருக்கும் ஆளுமை மிக்க பாத்திரத்தின் வலிமையை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
மற்றும் லொள்ளு சபா ஜீவா மெகாலி மீனாட்சி ஆகியோரும் நிறைவாகவே நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம் தான்.
இவ்வகைப் படங்களில் பிரச்சார நெடி தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றாலும் அதை முடிந்தவரை கண்டிப்பாக தவிர்த்தாக வேண்டும். இது குறித்து இயக்குனர் பாலு எஸ். வைத்தியநாதன் இன்னும் சற்று அதிக கவனம் செலுத்தி இருந்தால் படம் வெகு சிறப்பாகவே அமைந்திருக்கும்.
ஆயினும் மாறுபட்ட கதை களத்திற்காகவும், துணிச்சலான முயற்சிக்காகவும் தாராளமாக அறம் செய் படத்தை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
மதிப்பெண் 3/ 5