Friday, October 23

அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம்

Loading

அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம்

‘காதல் – மோதல் – சாதி’ – என்கிற வழக்கமான கதைதான்.

நாயகன் சக்திவேல், கிராமத்தில் வசிப்பவர். வேறு சாதி பெண்ணை காதலிக்கிறார். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்கிறது. மீறி, காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. வெளியூர் பறக்கிறார்கள்.

காதலியின் குடும்பத்தினர், தம்பதி இருவரையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

கதை, திரைக்கதை எழுதி நாயகனாக நடித்துள்ளார் பவன். காதல், மோதல், காமெடி என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி முகபாவம் காண்பிக்கிறார்.

அதே நேரம், தாத்தா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் அவரை ஊரார் தடுக்க.. இவர் அழுது புலம்பும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

அழகான நாயகி மேக்னா. காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

நாயகனின் தந்தையாக வரும் சார்லி, வழக்கம் போலவே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். குறிப்பாக, ‘என் அப்பாவை அனாதைப் பிணமாக்கவாடா வந்தே’ என மகனிடம் மல்லுகட்டும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

தங்கையின் காதலை அறிந்து குமுறும் அண்ணனாக நடித்து உள்ளார் பிர்லா போஸ். தங்கையை கொல்ல முனையும்போது அத்தனை ஆக்ரோசம். சாதி வெறி அண்ணனாக வந்து முத்திரை பதிக்கிறார்.

காமெடி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் வந்து போகிறார் இமான் அண்ணாச்சி.

‘சூப்பர்குட்’ சுப்ரமணி, அழகு, கராத்தே வெங்கடேஷ் என பலரும் கொஞ்ச நேரமே வந்தாலும், கிராமத்து மனிதர்களை கண் முன் நிறுத்தி உள்ளனர்.

மணி அமுதவன் இசை சிறப்பு. குறிப்பாக அந்தோணி தாசன் குரலில்ல ஒலிக்கும் ‘வண்ண வண்ண எறகு நீ’ பாடல் அற்புதம்.
ஜெ பி மேன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
மனிதர்களின் சாதி வெறியை அப்பட்டமாய் வெளிப்படுத்திய வகையில், படம் பாராட்டுக்கு உரியதே.