Monday, November 9

‘அதோமுகம்’ – விமர்சனம்

Loading

‘அதோமுகம்’ – விமர்சனம்

பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றால், ஓரளவாவது யூகிக்கும் அளவுக்கு ட்விஸ்ட்கள் இருக்கும். இந்தப் படத்தில் எதிர்பார்க்கவே இயலாத அளவுக்கு அதிரடி ட்விஸ்ட்கள் அணிவகுக்கின்றன.

மனைவி மீது கொள்ளைப் பிரியம் வைத்திருப்பவர் இளைஞர் மார்ட்டின். தன் மனைவிக்குத் தெரியாமல், கண்காணித்து, அந்த சூழலுக்கு ஏற்ப ஓர் அதிரடி கிப்ட் கொடுத்து திகைக்க வைக்க வேண்டும் ென நினைக்கிறார்.
இதற்காக அவளது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்கிறான். இதன் மூலம், அவளது போன் கால்கள், நடவடிக்கை அனைத்தும் மார்ட்டின் கவனத்துக்கு வருகின்றன.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்ட்டினுக்கே அதிர்ச்சி அதிர்ச்சி காத்திருக்கிறது. மனைவியை சந்திக்க யாரோ தன் வீட்டுக்கு வருவதும், அவர்களுடன் மனைவி உரையாடுவதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தாக்குகிறது மார்ட்டினை.

அதன் பிறகு நடப்பதெல்லாம் அக்மார்க் சஸ்பென்ஸ்கள்தான். இந்த சஸ்பென்ஸ் முடிச்சுகள், கிளைமாக்ஸ் வரை தொடர்கின்றன.

ஹீரோ மார்ட்டினாக எஸ் பி சித்தார்த் நடித்து இருக்கிறார். தன்னைச் சுற்றி ஏன் பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது என்று புரியாமல் குழம்புவது, மனைவியிடம் காட்டும் பாசம், பிரச்சினையில் இருந்து தப்பிக்க துடிதுடிப்பது, சிறையில் வாடுவது என சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்து உள்ளார்.
அவருக்கு இணையாக ஹீரோயின் அசத்துகிறார். கணவனை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுப்பவர், விநாடி நேரத்தில் குறியை மாற்றி இன்னொருவனை கொல்லும் காட்சியில் நிஜமாகவே மிரட்டிவிடுகிறார்.
அப்பாவி தோற்றம்… அதன் பின்னே வஞ்சனை என சிறப்பாக நடித்து உள்ளார்.

சிறைவாசியாக சில காட்சிகள் கேமியோ ரோலில் வருகிறார் அருண் பாண்டியன். அடுத்த பார்ட்டில் இவருக்கு முக்கியமான ரோல் இருக்கும் என்பது தெரிகிறது.

அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் என மற்ற நடிகர்களும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவு, சரண் ராகவனின் பின்னணி இசை, விஷ்ணு விஜயனின் படத்தொகுப்பு என அனைத்தும் படத்துக்கு பலம்.

யூகிக்க முடியாத திருப்பங்களை கொடுத்து அசரடித்து இருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ். அதோடு நமக்குத் தேவையான மெஸேஜ் ஒன்றையும் சொல்லி இருக்கிறார். வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ இப்போது வரும் படங்கள் பலவற்றிலும் இரண்டாவது பாகம் வெளிவர இருப்பதை கோடிட்டுக் காட்டுவார்கள். ஆனால் அதோ முகம் படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான அருமையான முன்னோட்டக் காட்சிகள் அமர்க்களமாக அமைந்திருப்பது எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிற வைத்திருக்கிறது
மொத்தத்தில் பார்த்து ரசிக்கலாம்..!

மதிப்பெண் 3.5/5