Sunday, October 25

‘அயலி’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Loading

‘அயலி’ – வெப் சீரிஸ் விமர்சனம்

ஜனவரி 26ஆம் தேதி முதல் ஜீ5 ஒரிஜினலாக ஸ்ட்ரீமாகும் அயலி வெப் சீரிஸில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கப் போகிறது என்றால் மிகையல்ல.

பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அல்லது நடந்த விஷயங்களை, குறிப்பாக பெண் கல்வி மறுக்கப்படுவதையும், பூப்பெய்திய பெண்ணை உடனடியாக திருமணம் செய்து கொடுப்பதையும், அதனால் ஏற்படும் மோசமான பின் விளைவுகளையும் முகத்தில் அறைந்தாற்போல் விரிவாகவும் சுவைபடவும் சொல்லியிருக்கிறாள் அயலி.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்காகவே இயக்குநர் முத்து குமாருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.

குக்கிராமம் ஒன்றில் 1990ஆம் ஆண்டு பின்னணியில் நடப்பதாக புனையப்பட்ட கதை என்றாலும் மாதவிடாய் காலத்தில் இன்னும் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்தாமல், பழைய துணியை கிழித்து பயன்படுத்துவதும், அந்தத் துணியையே துவைத்து மீண்டும் பயன்படுத்துவதும் இந்தக்காலத்திலும் பல கிராமங்களில் நடப்பதை மறுப்பதற்கில்லை.

கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆண் பெண் இருபாலரும் படித்தாலும், பத்தாம் வகுப்பில் மாணவிகள் யாரும் இல்லை. காரணம் பெண்கள் பூப்பெய்தியதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கத்தான் பெற்றோர் முனைப்பு காட்டுகிறார்களே தவிர, மகள் தன் படிப்பைத் தொடர எந்தப் பெற்றோரும் அனுமதிப்பதில்லை. இதையே பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்லி காலம் காலமாக கடை பிடித்து வருகிறார்கள்.

வகுப்பறை கரும்பலகையில்கூட மாணவர்கள் வருகை பதிவுதான் இருக்குமே தவிர, மாணவி என்ற இடம் காலியாகத்தான் இருக்கும்.

இப்படிப்பட்ட கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் தமிழச் செல்வி என்ற மாணவிக்கு தொடர்ந்து மேற்கொண்டு தன் படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆசை. அதுவும் மருத்தவராக வேண்டும் என்று ஆசை.

பள்ளி தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பில் தேர்வாகும் மாணவன் பெயரை எழுதி வைப்பதற்காக ஒரு போர்டை தயார் செய்து வைக்க, அந்த போர்டில் தமிழ்ச் செல்வி தன் பெயரை சாக்பீஸில் எழுதி அழகு பார்க்கிறாள்.

இதைப் பார்க்கும் தலைமை ஆசிரியை “சாக்பீஸில் எழுதினால் அது அழிந்து விடும் படித்து பாஸ் பண்ணு….பெயிண்ட்டில் பெயரை எழுதலாம்….அது அழியாது”  என்று தமிழ்ச்செல்வியின் படிப்பு ஆசைக்கு எண்ணை ஊற்றி கொழுந்து விட்டு எரிய விடுகிறார்.

பூப்பெய்திய விஷயத்தை சொன்னால்தானே அம்மா படிப்பை நிறுத்தி கல்யாணம் செய்து வைப்பார்கள், அதை சொல்லாமலே மறைத்து விட்டால் படிப்பைத் தொடரலாமே என்று, தான் பூப்பெய்திய விஷயத்தை மறைத்து படிப்பைத் தொடர்கிறாள் தமிழ்ச் செல்வி.

ஒரு நாள் தமிழ்ச்செல்வியின் அம்மாவுக்கு விஷயம் தெரிய வர, அதிர்ச்சியில் உறைந்து போகிறாள் அவள். ஆயினும் தன் தரப்பு நியாயங்களைச் சொல்லி அம்மாவை சமாளித்து, தன் படிப்பு ஆசை நிறைவேற ஒத்துக்கொள்ள வைக்கிறாள்.

அம்மா அரை மனதுடன் கணவருக்குத் தெரியாமல் இதை மறைத்து தமிழ்ச் செல்விக்கு உதவுகிறாள்.

அருகில் உள்ள நகரத்துக்கு சென்றுதான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும். கிராமத்தைவிட்டு வெளியே நகரத்துக்கு பெண் செல்வதெல்லாம் நமது பண்பாடு அல்ல என்று மறுக்கும் அப்பாவையும் ஒரு வழியாக சமாளித்து சம்மதம் வாங்கி நகரத்துக்கு சென்று தேர்வு எழுதும் தமிழ்ச் செல்வி, நல்ல மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி அடையகிறாள்.

மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கல்வி அதிகாரியுமே சேர்ந்து பள்ளிக்கு வந்து தமிழ் செல்வியை விழா எடுத்து வாழ்த்துகின்றனர்.

இப்படி போராடிப் போராடியே ஜெயிக்கும் தமிழ்ச்செல்வியைப் பார்த்து, அதுவரை ஒருவர்கூட பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிக்கின்றன.

தன் விடாமுயற்சியால் வெற்றி பெறும் தமிழ்ச் செல்வி எப்படி ஊர் மக்களின் மூட நம்பிக்கைகளையும் விரட்டியடித்து, அவர்களையும் மாற்றுகிறாள் என்பதை எட்டு எபிசஸோடில் சுவைபடவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் சீரிஸ்தான் அயலி.

தமிழ்ச் செல்வி வேடத்தில் அபி நட்சத்திரா வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. அம்மா வேடம் ஏற்று நடித்திருக்கும் அனுமோல் மகளின் ஆசைக்கு அணை போட முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அம்மா மகளுக்குமிடைய உள்ள பாண்டிங் பிரமாதமாக திரையில் வடிக்கப்பட்டிருக்கிறது.

பிரதான வில்லனாக வரும் டிஸ்ஆர் தர்மராஜ் மூர்த்தியின் வசன உச்சரிப்பும் அவரது உடல் மொழியும் ஏற்ற பாத்திரத்துக்கு வலு சேர்க்க உதவியிருக்கிறது.

மற்றும் லிங்கா, சிங்கம் புலி, லவ்லின், அருவி மதன் என அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஊரையே அழைத்து விழா எடுத்து மகளுக்கு நடத்த வேண்டிய சடங்கை யாருக்கும் தெரியாமல் தான் மட்டும் ஒரு தட்டில் குங்குமம் பூ வைத்துக்கொண்டு கனத்த இதயத்துடன் செய்யும் காட்சியில் அனு மோல் நடிப்பு பிரகாசிக்கிறது.

கிராமத்தில் எந்த மாணவனும் பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததில்லை என்று வசனத்தில் வருகிறது. பிறகு எப்படி அந்த கிராமத்தைச் சேரந்த டி.எஸ்.ஆர். தர்மராஜ் மூர்த்தி அதே பள்ளியின் ஆசிரியர் பணிக்கு வந்தார்

தமிழ்ச் செல்வி பத்தாம் வகுப்புக்கு வந்ததுமே இனி நிலைமை தலைகீழாகப் போகிறது என்று சொல்லாமல் சொல்வதுபோல் டாப் ஆங்கிளில் ஷாட் வைத்திருக்கும் ராம்ஜியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
கிராமத்தின் எளிமையையும் அழகையும் அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கும் ராம்ஜியின் கேமரா அயலிக்கு மிகப் பெரிய பலம்.

குஷ்மாவதி என்ற பெண் தயாரித்திருக்கும் அயலி வெப் சீரிஸுக்கு இசையமைத்திருப்பது ரேவா என்ற பெண்.

மூட நம்பிக்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்திருப்பதுடன் பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை உரத்த குரலில் சிந்திக்க வைத்த அயலி அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய அற்புத படைப்பு.

மதிப்பெண் 4.5 /5