Monday, September 21

பனாரஸ் – திரை விமர்சனம்

Loading

பனாரஸ் – திரை விமர்சனம்

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது….

யுவதி ஒருத்தியிடம் வந்து ஓர் இளைஞன் நான் எதிர்காலத்திலிருந்து வருகிறேன். நீதான் என் மனைவி எனக் கூறுகிறான்…. டைம் லூப்பில் நான் இருக்கிறேன் என்று சொல்லி அவளைக் குழப்புகிறான்.

அடுத்ததாக நண்பர்கள் குழாமுடன் இருக்கும் அந்த இளைஞன், மனைவி என்று பொய் சொல்லி அந்தப் பெண்ணின் படுக்கையறைவரை சென்று,  தான் பந்தயத்தில் ஜெயித்து விட்டதாகக் கூறுகிறான்.

மேலும் அந்த யுவதியுடன் நெருக்கமாக தான் இருப்பதுபோன்ற சுயவிவரப் படத்தையும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவிட, கதை விறுவிறுவென ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.

இளைஞனால் பாதிக்கப்பட்ட யுவதி, தன் சித்தப்பா மற்றும் சித்தி இருக்கும் பானாரஸூக்கு சென்றுவிட, தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்க இளைஞனும் பனாரஸ் செல்கிறான்.

பனாரஸின் ஆட்டோ ஓட்டும் தமிழர் ஒருவர் இளைஞனுக்கு உதவ முன் வர, தொடர்ந்து நடக்கும் சுவையான பல சம்பவங்கள்தான் பனாரஸ் படத்தின் கதை.

படத்தின் கதையை எழுதி இயக்கிறார் ஜெயதீர்த்தா. துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வின்றி விறுவிறுப்பாக கதையை சொல்லியிருப்பது சிறப்பு.

டைம் லூப் தொடர்பான கதை மற்றும் காட்சிகள் மிகச் சரியாக கையாளப்பட வேண்டும். இல்லாவிடில் பார்வையாளர்களைக் குழப்பி விடும். கரணம் தப்பினால் மரணம்தான். பனாரஸ் படம் டைம் லூப் தொடர்பான கதை என்றாலும், மிகத் தெளிவாக கையாளப்பட்டிருக்கிறது.

அறிமுக நாயகன் ஜையீத் கான் நாயகி சோனல் மோண்டோரியோ இருவரையுமே புதுமுகங்கள் என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சிற்பாக நடித்திருக்கின்றனர்.

நாயகன் ஜையீத் கான் டைம் லூப்பில் சிக்கிக்கொண்டு குழம்பும் காட்சியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.சண்டைக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

அடுத்த வீ்ட்டுப் பெண் போன்ற எளிமையான அழகு சோனல் மோண்டோரியோ. பாடல் காட்சி ஒன்றில் கவர்ச்சிகரமான உடையில் வந்து அசத்துகிறார்.

கதையின் பெரும் பகுதி காசியில் நடக்கிறது. அதுவும் வெளிப்புறக் காட்சிகள்தான் அதிகம். காசியில் நாமே சில நாட்கள் இருந்து விட்டு வந்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது. காசியின் அத்தனை அழகையும் அள்ளி வந்திருக்கிறது அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு.

அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் உருவான பாடல் அனைத்தும் இனிமை. குறிப்பாக மாய கங்கா பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. பின்னணி இசையும் நிறைவாகவே இருக்கிறது.

வித்தியாசமான கதைக் களம், காசியின் அழகு, இனிமையான பாடல்களுக்காகவே தாராளமாகப் பார்க்கலாம் பனாரஸ்.

மதிப்பெண் 3.5 /5