பிளாக் _ விமர்சனம்
தம்பதிகளான ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் தாங்கள் வாங்கி இருக்கும் புதிய வீட்டில் ஐந்து நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டு அங்கு செல்கின்றனர்.
கடற்கரைக்கு வெகு சமீபத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த குடியிருப்பில் அதுவரை யாருமே குடி வரவில்லை. அடுக்குமாடி குடியிருப்பாக அல்லாமல் தனித்தனி வில்லாவாக அமைந்துள்ள பகுதி அது.
அங்கு நுழையும் போதே ஒருவித அமானுஷ்யத்தை உணர்கிறார் ஜீவா. திடீரென மின்தடை ஏற்படவே ஜீவா பிரியா பவானி சங்கர் இருவருமே கிளப் ஹவுஸ் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜெனரேட்டரை ஆன் செய்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து சில திகிலான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. யாருமே இல்லாத எதிர் வீட்டில் திடீரென்று விளக்கு எரிவது கண்டு இருவரும் அங்கு சென்று பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைகிறார்கள். காரணம் அச்சு அசலாக தங்களைப் போலவே தோற்றமளிக்கும் மற்றொரு ஜோடி அதாவது (இன்னொரு ஜீவா, இன்னொரு பிரியா பவானி சங்கர்) இருவருமே அந்த வீட்டில் இருக்கிறார்கள்.
தங்களைப் போலவே இருக்கும் இவர்கள் யார் என்ற குழப்பம் இருவருக்கும் நீடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
தங்களுக்கு நடக்கும் சம்பவங்களுக்கும், அவர்களுக்கு நடக்கும் சம்பவங்களுக்கும் அரை மணி நேர கால வித்தியாசம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. இந்த அமானுஷ்யம் எப்படி நடக்கிறது என்பதை விஞ்ஞான ரீதியாக கிளைமாக்ஸ் விளக்குகிறது.
பேரலல் ரியாலிட்டி, குவாண்டம் பிசிக்ஸ், பெர்முடா ட்ரையாங்கிள் என்று பலவகை தியரிகளையும் பேசி, கதையில் நடைபெறும் சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை பலப்படுத்தி இருக்கிறார்கள்.
டைம் லூப் கதை என்றாலும் ஒரு ஜீவாவுடன் மற்றொரு ஜீவா வந்து சண்டை போடுவது பார்வையாளர்களை குழப்பத்தான் செய்கிறது.
ஓர் இரவுக்குள் நடக்கும் கதை என்பதால் முழு படத்தையும் ஆக்கிரமித்திருக்கும் இரண்டு பிரதான பாத்திரங்கள், (அவர்களுக்கும் ஒரே உடை தான்) லொகேஷன் மாற்றம் கூட இல்லாமல் ஒரே இடம்தான் என்றாலும் இப்படி ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் பாலசுப்பிரமணி அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
வெளிப்புற காரிருளில் ஓரிரு விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி குறைந்தபட்ச ஒளி அமைப்பில் அற்புதம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் சாம். சி அமைத்திருக்கும் பின்னணி இசை என்றால் மிகை ஆகாது. படத்துக்கு உயிரோட்டமாக அமைந்து படத்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது அவரது பங்களிப்பு.
விஞ்ஞான கதையை வித்தியாசமான முறையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் பிளாக் படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
மதிப்பெண் 3.5/5