Monday, January 20

புஜ்ஜி அட் அனுப்பட்டி _ விமர்சனம்

Loading

புஜ்ஜி அட் அனுப்பட்டி விமர்சனம்

தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கானதாக இருப்பதில்லை’ என்கிற விமர்சனம், உண்டு.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் அத்தி பூத்தது மாதிரி சில நல்ல படங்கள் வருவது உண்டு.
அந்த வகையில் மலந்திருக்கும் பூ.. ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்.. அண்ணன் சரவணன் – தங்கை துர்கா. இருவரும் ஊத்துக்குளி அருகே ஒரு கிராமத்தில் பெற்றோர்களுடன் பண்ணை வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். எளிய குடும்பம்.
. பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்.
சிறுவன் சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து அவனும், அவன் தங்கை துர்காவும் வீடு திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது.

துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து, புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள்.

ஆனால், சில நாட்கள் கழித்து ஆட்டை காணவில்லை. சிறுவர்களின் தந்தை, அந்த ஆட்டுக்குட்டியை விற்று குடித்தது தெரிய வருகிறது.

இதனால் மனமுடைந்து போகிறாள் சிறுமி துர்கா. அவர் மனம் வருந்துவதைப் பார்த்து அண்ணன் சிவா, புஜ்ஜியைத் தேடிக் கண்டுபிடிக்க திட்டமிடுகிறான்.
அண்ணனும் தங்கையும், ஆட்டுக்குட்டியைத் தேடி புறப்படுகிறார்கள்.
இருவரின் பயணமே – பதைபதைக்க வைக்கும் – மீதிக்கதை.

சிறுமி துர்காவாக வரும் பிரிணதி, அற்புதமாக நடித்து இருக்கிறார். வழியில் கிடைக்கும் ஆட்டை, “அண்ணா.. நம்ம வீட்டுக்கு கொண்டு போயி வளர்க்கலாமா” என கண்களில் ஒளி மின்ன கேட்பது… ஆடு காணவில்லை என்றதும் அழுது துடிப்பது, “அய்யோ.. ஆட்டை வெட்டிட்டாங்களா” என பதைபதைப்பது… சிறப்பான நடிப்பு.

அவரது அண்ணனாக வரும் கார்த்திக் விஜயும் சிறப்பாக நடித்து உள்ளார். ஆரம்பத்தில் ஆட்டுக்கறியை எச்சில் ஊற பார்ப்பது… பிறகு, “கறி சாப்புடுறத உட்டுட்டேண்ணா” என்பது, தங்கையை அழைத்துக்கொண்டு ஆட்டை த் தேடி பயணிப்பது… இந்த சிறுவனுக்கும் பாராட்டுகள்.

இவர்களுக்கு இணைந்து ஆட்டைத் தேடி பயணிக்கும் அந்த டீன் ஏஜ் பெண்ணும் கவனம் ஈர்க்கிறார். முகத்தில் சோகம்.. பெற்றோர் இல்லை.. ஆனாலும், சிறுவர்களுக்கு அக்கறையாக உணவு எடுத்து வருவது.. அந்த உணவு கெட்டுப் போயிருப்பதாக சிறுமி சொன்னவுடன் ஓடிப்போய் கடையில் இட்லி வாங்கி வருவது.. அற்புதமான நடிப்பு.
பண்ணையாளராக வரும் கமல்குமார், குழந்தைகளிடம் பாசம் காட்டுவது, அவர்களை பதறித் தேடுவது என்று நல்ல மனிதரை கண் முன் நிறுத்துகிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் லாவண்யா கண்மணி, கறிக்கடை நடத்தும் இஸ்லாமியராக வரும் நபர், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, நக்கலைட்ஸ் மீனா, உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவு, கார்த்திக் ராஜாவின் இசை, மாதேஸ்வரனின் படத்தொகுப்பு அனைத்துமே படத்துடன் ஒன்றி ரசிக்கவைக்கின்றன.

ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையை, நமக்குள் ஊடுருவும்படி அளித்த இயக்குநர் ராம் கந்தசாமிக்கு பாராட்டுகள்.
அனைவரும் ரசித்துப் பார்க்கக்கூடிய படம்.