Thursday, October 1

பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

Loading

பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

பிக் பாஸ் புகழ் ராஜு கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பன் பட்டர் ஜாம்.

கதாநாயகிகளாக ஆதியா மற்றும் பாவ்யா இருவரும் நடித்திருக்கின்றனர்.

ஃபிரண்ட், லவ்வர், பெஸ்டி என்றெல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்பதை வைத்து இந்தப் படம் உருவாக்க பட்டதோ?

ராஜுவின் தாயார் சரண்யா பொன்வண்ணனும், ஆதியாவின் அம்மா தேவதர்ஷணியும் இணைந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர்.

அதாவது தங்கள் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும்போது, யாரையாவது காதலித்து தொலைத்து, கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக தங்கள் பிள்ளைகள் இருவரையும் ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்து, பழக வைத்து அவர்களை காதலிக்கவும் வைத்து, திருமணம் செய்து வைத்து விடலாம் என்பதுதான் அந்த (சிறப்பு)  திட்டம். 

பிள்ளைகளைப் பொறுத்தவரை அது லவ் மேரேஜ் ஆகவும்,  அம்மாக்களை பொறுத்தவரை அது அரேஞ்ச்ட்  மேரேஜ் ஆகவும் இருக்குமாம் (!)

கல்லூரிக்குச் செல்லும் ராஜு அங்கு பாவ்யாவை காதலிக்கிறார். இந்த சூழலில் சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு அருகிலேயே குடி வரும் தேவ்தர்ஷிணியின் மகள் ஆதியாவோ மற்றொரு இளைஞனை காதலிக்கிறார்.

அம்மாக்களின் ஆசை நிறைவேறியதா அல்லது பிள்ளைகளின் காதல் நிறைவேறியதா என்பதுதான் பன் பட்டர் ஜாம் படத்தின் கதை.

படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இளமை துள்ளல் மிக்க சுவாரசியமான ஒரு படம் தான்.

துவக்கத்திலிருந்து இறுதிவரை படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்திருக்கிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியனின் கதையை சிறந்ததொரு பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.

பாபு குமாரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வண்ணம் கலர்ஃபுல்லாக அமைந்திருக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் உருவான பாடலும் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கின்றன.

சிறப்பு தோற்றத்தில் வரும் சீனியர் ஸ்டுடண்ட் விக்ராந்த் சற்றே மிகைப்படுத்தப்பட்ட பாத்திரம்தான்.

நாயகன் நாயகி இருவரையும்விட அவர்களது அம்மாக்கள் ஆதிக்கம் சில காட்சிகளில் அதிகமாக இருப்பதை நகைச்சுவை என்ற பெயரில் ஏற்றுக் கொள்வது கடினம்தான்.

இது போன்ற ஓரிரு குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் ‘பன் பட்டர் ஜாம்’  நல்லதொரு பொழுதுபோக்கு படம் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5/5