Friday, October 2

கால் டாக்ஸி – விமர்சனம்

Loading

கால் டாக்ஸி – விமர்சனம்

கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் உருவாகியிருக்கும் கால் டாக்ஸி படத்தில் புதுமுகம் சந்தோஷ் சரவணன் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார் போன்ற மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களே.

கால் டாக்ஸி டிரைவர்களின் பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால் கதைக்களன் சற்று புதிதாக இருக்கிறது.

கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் தன் சொந்த அலுவல் கராணமாக செல்ல வேண்டியிருப்பதால், தான் செல்ல வேண்டிய சவாரிக்கு தனது நண்பரான மற்றொரு டிரைவரை அனுப்பி வைக்கிறார்.

சவாரி சென்று கொண்டிருக்கையில், தன் காரில் பயணிப்பவர்களின் பேச்சிலிருந்து அவர்கள், தவறான காரியங்களில் ஈடுபடும் நிழலான ஆசாமிகள் என்பது டிரைவருக்குத் தெரிய வருகிறது.

உடனே வண்டியை நிறுத்திவிட்டு தன்னை அனுப்பிய டிரைவருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்கிறார். இதை கவனித்துவிட்ட அந்தக் கயவர்கள், டிரைவரைக் கொலை செய்துவிட்டு காரையும் கடத்திச் சென்று விடுகிறார்கள்.

கொலையாளியை விரைவில் கண்டு பிடிக்க வேண்டும் என்று மற்ற டிரைவர்கள் காவல் துறை அதிகாரியிடம் முறையிட்டும், அவர் மெத்தனம் காட்டுகிறார். எனவே நாயகன் தானே களத்தில் இறங்கி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார்.

கொலையாளிகள் சிக்கினார்களா, இல்லையா என்பதை படத்தின் பிற்பகுதி சொல்கிறது.
கொலையாளியேத் தேடும் முயற்சியில் நாயகன் ஈடுபடத் தொடங்கிய பிறகு, கதை ஜெட் வேகம் எடுக்கிறது. படத்தின் முன் பாதியைவிட பின் பாதி இன்னும் நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது.

கதாநாயகன் வேடம் ஏற்றிருக்கும் சந்தோஷ் சரவணன் புதுமுகத்தைப் போலவே தெரியவில்லை. நன்கு அனுபவப்பட்ட நடிகரைப்போல் முதல் படத்திலேயே திறம்பட நடித்திருக்கிறார். நல்ல கதைகளையும், தனக்கேற்ற வேடங்களையும் தேர்வு செய்து நடித்தால் தமிழ்ப்படவுலகில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புண்டு.

கதாநாயகி வேடம் ஏற்றிருக்கும் அஸ்வினி சந்திரசேகர் அழகாக இருக்கிறார். ஆயினும் நடிப்பதற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாத பாத்திரமாக அமைந்து விட்டது.

நாயகன், நாயகியிடம் “… கடும் வெயிலில் காரில் படுத்து தூங்கியிருக்கிறாயா… பண்டிகை சமயங்களில்கூட குடும்பத்துடன் இருக்க முடியாமல் வருத்தப்பட்டிருக்கிறாயா….” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கார் டிரைவரின் கஷ்டமான வாழ்க்கையே வெளிப்படுத்தும் காட்சி நெஞ்சைத் தொடுகிறது.

படத்துக்கு பாடல் எழுதி இசையமைத்திருப்பவர் பாணர்.
எம்.ஏ. ராஜதுரையின் ஒளிப்பதிவும், டேவிட் அஜய் செய்திருக்கும் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

கால் டாக்ஸியில் ஒரு முறை பயணிக்கலாம்.