Wednesday, January 22

சந்திரமுகி 2 _ விமர்சனம்

Loading

சந்திரமுகி 2 _ விமர்சனம்

மறக்க முடியாத பாத்திரங்களில் ரஜினிகாந்த் ஜோதிகா நடித்து வெளியான சந்திரமுகி வசூல் சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் கங்கணா ரணாவத் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் சந்திரமுகி 2 எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா?

பெரும் செல்வந்தரான ராதிகா குடும்பத்தில் தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து குடும்ப ஜோதிடரை கலந்து ஆலோசிக்கும் ராதிகாவுக்கு குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்லாததே காரணம் என்று ஜோதிடர் மூலம் தெரியவருகிறது.

குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட ராதிகாவின் மூத்த மகளின் குழந்தைகள் இருவர், அவர்களின் பாதுகாவலர் ராகவா லாரன்ஸ் மற்றும் இரண்டாவது மகள் லஷ்மி மேனன் கணவர் சுரேஷ் மேனன் ஆகியோருவுடன் குலதெய்வம் கோயிலுக்கு புறப்படுகிறார் ராதிகா.

அங்கு வேட்டையன் ராஜா இருந்த அரண்மனையில் அனைவரும் தங்குகிறார்கள். கோவிலை சுத்தப்படத்தும் பணியின்போதே இரண்டு பணியாள்களுக்கு அகால மரணம் சம்பவிக்கிறது.

குலதெய்வம் கோயிலை சுத்தப்படுத்த சந்திரமுகி ஆவி அனுமதிக்காது என்று அங்குள்ள்ள சாமியார் ஒருவர் கூறுகிறார்.

நடக்கவே இயலாமல் சக்கர நாற்காலியில் வலம் வரும் லஷ்மி மேனன் உடலில் சந்திரமுகி ஆவி புகுந்தும் அவர் எழுந்து நடமாடுகிறார் நடனம் ஆடுகிறார்.

ராதிகாவின் பேரக்குழந்தைகள் பாதுகாவலராக வரும் ராகவா லாரன்ஸ் உடலில் வேட்டை யன் ராஜா ஆவி புகுந்து கொள்கிறது. பிறகென்ன? ஆவிக்கும் ஆவிக்கும் சண்டைதான்…

ராதிகாவின் குடும்பம் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்தியதா சந்திரமுகி ஆவியை எப்படி எதிர்கொண்டது என்பதை படத்தின் பிற்பகுதி விளக்குகிறது.

குழந்தைகளின் பாதுகாவலர் பாண்டியனாக வரும் ராகவா லாரன்ஸ் பாண்டியன் வேடத்தில் அடக்கி வாசித்து இருக்கிறார். வேட்டையன் ஆவி உடலில் புகுந்ததும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

பல இடங்களில் ரஜினிகாந்த் நடிப்பை நினைவுபடுத்ததை ராகவா லாரன்ஸ் தவிர்த்து இருக்கலாம்.

சந்திரமுகி வேடத்தில் வரும் கங்கணா ரணாவத் படத்துடன் ஒட்டாமல் அந்நியமாகத் தெரிகிறார்.

மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா, சுரேஷ் மேனன் என்று வரும் துணைப் பாத்திரங்கள் அனைத்தும் தங்கள் பணியை சிறப்பாகவே செய்து இருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவு. கண்ணுக்கு குளிச்சியான காட்சிகளையும் கிராமத்து அழகையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது ஆர்டி ராஜசேகரின் கேமரா.

கீரவாணி இசையில் உருவான பாடல்கள் மிகவும் சிறப்பு. படத்தின் பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருக்கிறார் கீரவாணி.

வேட்டையன் அரண்மனைக்கு சொந்தக்காரராக வரும் வடிவேலுவின் நகைச்சுவை ‘சி’சென்டர்களில் ரசிக்கப்படும்.

அமானுஷ்யம் நகைச்சுவை ஆகியவற்றை அளவோடு அழகாக கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய குடும்ப சித்திரமாக சந்திரமுகி 2 படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பி வாசு.

ரசிகர்கள் முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத்தை ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த இயக்குனர் பி.வாசு கத்தி மேல் நடக்கும் பணியை கச்சிதமாக செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

மதிப்பெண் 3/5