![]()
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்
மதுரையில் வாழ்ந்து மறைந்த பிரபல மர்மக்கதை ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்களை தொடராக எழுதுவதற்கு ஒரு பத்திரிகை முடிவு செய்கிறது.
இதற்காக ஆசிரியர் குழுவை சேர்ந்த சில்பா மஞ்சுநாத், நாவலாசிரியரின் மகன் வெற்றியை சந்தித்து பேசுகிறார்.
சில்பா மஞ்சுநாத்துக்கு உதவ சென்னைக்கு வருகிறார் வெற்றி.
வந்த இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் ஏற்படுகிறது.
கொலை ஒன்றை துப்பறியும் பணியில் இருந்த தம்பி ராமையாவுக்கு துப்பறியும் கதாசிரியர் மகன் வெற்றி உதவ முன் வருகிறார்.
கொலை ஒன்றுடன் நிற்காமல் தொடர்கிறது. மேலும் பல கொலைகள் தொடர்ந்து நடக்கவே சீரியல் இல்ல யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாகிறது.
இந்த சூழலில் போட்டித் தேர்வுக்கு படித்து வந்த தம்பி ராமையாவின் மகள், வணிக வளாகம் ஒன்றின் மேல் தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
மகளின் மறைவால் உடைந்து போயிருக்கும் தம்பி ராமையாவை தேற்றி ஆறுதல் படுத்தும் வெற்றி, தொடர் கொலைகளுக்கும் தம்பி ராமையாவின் மகள் தற்கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார்.
அப்பாவின் துப்பறியும் கதைகளை ஆழ்ந்து வாசித்த வெற்றி, தான் படித்துப் பெற்ற அறிவை, நிஜமான கொலைகளுடன் எவ்வாறு தொடர்பு படுத்தி தம்பி ராமையாவுக்கு உதவுகிறார் என்பதுதான் ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’ படத்தின் கதை.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் வெற்றி, இந்தப் படத்தின் கதை தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
மேலும் அவரது நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
நாயகியாக வரும் ஷில்பா மஞ்சுநாத்துக்கு வேலை அதிகம் இல்லை.
பல காட்சிகளில் காமெடி பீஸ் ஆக இருக்கும் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா, சில காட்சிகளில் மட்டும் சீரியஸாகி துப்பு துவங்க ஆரம்பித்து விடுகிறார்.
வித்தியாசமான கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் திரையில் சொல்லிய இயக்குநர் அனீஸ் அஸ்ரஃபை தாராளமாக பாராட்டலாம்.
அரவிந்தன் ஒளிப்பதிவும், ஏ ஜே ஆர் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.
பொறுப்பான ஒரு காவல்துறை ஆய்வாளர், கதாசிரியர் ஒருவரின் மகனுக்கு தனது பணியில் இந்த அளவுக்கு இடம் கொடுத்து துப்பு துலங்க அனுமதிப்பாரா என்பது போன்ற லாஜிக்கான கேள்விகளை மறந்துவிட்டு படம் பார்த்தால் தாராளமாக ரசித்து மகிழலாம்.


