![]()

சிக்லெட்ஸ் _ விமர்சனம்
‘திறந்திடு சிசே’ படத்தை இயக்கிய எம்.முத்து உருவாக்கத்தில், தெலுங்கு நடிகர் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா, ஸ்ரீமன், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘சிக்லெட்ஸ்’.
கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப் படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைத்து உள்ளார். எஸ்.எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ், தெலுங்கில் தயாரித்து உள்ளார்.
படத்தில் மூன்று நாயகிகள். இவர்கள் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா தோழிகள்.
கல்லூரி பருவத்தை கடக்கும் இவர்களுக்கு, ‘சுதந்திர தாகம்’ எடுக்கிறது. அதாவது, பெற்றோரிடம் தகவல் சொல்லாமல் எங்காவது சென்று ‘உற்சாகமாக’ இருக்க வேண்டும் என்பது இவர்களது திட்டம். பெற்றவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, தங்களது ஆண் நண்பர்களுடன் கிளப்புக்குப் புறப்படுகிறார்கள்..
இன்னொரு புறம் இவர்களைக் காணாமல், பெற்றோர் பரிதவித்து தேடுகின்றனர்.
இளைஞர்களை பெற்றோர் கண்டு பிடித்தார்களா, என்ன நடந்தது என்பது கதை.
நயன் கரிஷ்மா, அம்ரிதா, மஞ்சிரா ஆகியோர் நாயகிகள். இந்தக் கால இளம் பெண்களை கண் முன் நிறுத்துகின்றனர். உற்சாகம், கலாட்டா என துள்ளலாக நடித்து உள்ளனர்.
நாயகன் சாத்விக் வர்மாவும் நவநாகரீக இளைஞனாக வந்து முத்திரை பதிக்கிறார். ஸ்ரீமன் சிறப்பாக நடித்து உள்ளார். தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசம், நம்பிக்கையை அப்பாவி தகப்பனாக வெளிப்படுத்துகிறார். மற்ற நடிகர்களும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி திரைக்கதை உருவாகி இருக்கிறார் இயக்குநர் முத்து.
இளைஞர்கள் மட்டுமல்ல.. பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்.

