கோப்ரா – திரைப்பட விமர்சனம்

0

 59 total views,  2 views today

கோப்ரா – திரைப்பட விமர்சனம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம்,  இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார்,சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர், ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அசத்தலாக இருக்கின்றன படத்தின் ஆரம்பக் காட்சிகள்.

ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர் கொல்லப்படுகிறார்.

இந்தியாவின் வட மாநில முதலமைச்சர் ஒருவர் கொல்லப்படுகிறார்.

ரஷ்யாவில் இருக்கும் ராணுவ தளபதி கொல்லப்படுகிறார்

உலகின் வெவ்வேறு பகுதிளிலும் அதிமுக்கிய பிரமுகர்கள் கொல்லப்படுவதன் காரணம் என்ன….
ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாதவர்களாக இருக்கும் இவர்கள் ஏன் கொல்லப்படுகிறரா்கள். இவர்களை கொல்வது யார்….
எதற்காக இந்த கொலைகள் நடக்கின்றன என்பதுதான் கோப்ரா படத்தின் கதை.

இந்தக் கொலைகள் செய்யப்படும் விதம்தான் சுவாரஸ்யமானவை. கணித அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிட்டு ஒவ்வொரு கொலையும் நடத்தப்படுகிறது.

குறிப்பாக கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் நடைபெறும் கொலைக்கான திட்டமிடலும், அதன் பின்னணியில் இருக்கும் கணக்கும் அபாரம்.

கொலையாளியைப் பிடிக்க இன்டர்போல் போலீஸும் களமிறங்குகிறது.
இதற்கிடையில் கொலையாளியைப்பற்றி ரகசியமாக சில தகவல்களை இன்டர்போல் அதிகாரிக்கு கசியவிடுகிறார் ஒருவர். இப்படி சுவராஸ்யத்துக்கு குறைவில்லாமல் செல்கிறது கோப்ரா.

ஆயினும் இரண்டாம் பகுதியில் வரும் ப்ளாஷ் பேக் காட்சிகளும், வேறு பல காட்சிகளும் ஸ்பீட் பிரேக்கராக குறுக்கிட்டு படத்தின் விறுவிறுப்பைக் குறைத்து விடுகிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவுதான். ஆங்கிலப் படங்களையே மிஞ்சும் வண்ணம் வெளிநாட்டுக்காட்சிகளை மிக அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். உள்நாட்டில் நடக்கும் காட்சிகளையும் அதற்கு இணையாக ஒரே டோனில் பிரமாதமாகப் படமாக்கி அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பாடல்கள் அனைத்தும் அருமை. படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும் வண்ணம் பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

விக்ரம் பல கெட்ட அப்களில் வந்தாலும் நினைவில் நிற்கும்படியான வலுவான வேடம் ஒன்றும் இல்லை. அம்பத்தூரிலிருந்து ஆவடிக்கும் அயனாவரத்துக்கும் போய் வருவதைப்போல் நினைத்த நாட்டுக்கு நினைத்த கெட் அப்பில் ஒரு கொலையாளி சென்று வருவது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லையே.

விக்ரமின் அற்புதமான உழைப்பு விழலுக்குப் பாய்ச்சிய நீராகப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

விக்ரம் மட்டுமன்றி பேராசிரியையாகவும் வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, காதலியாக வரும் மிருணாளினி ரவி, மாணவியாக வரும் மீனாட்சி, வில்லனாக வரும் ரோஷன் மேத்யூ, ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

இண்டர்போல் அதிகாரி வேடத்தில் வரும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளையாடியிருக்கிறார்.

மொத்த படத்தையும் ஒற்றை மனிதனாகத் தாங்கிப் பிடிக்கும் விக்ரமுக்காகவே தாராளமாக கோப்ராவைக் கண்டு ரசிக்கலாம்.

Share.

Comments are closed.