Friday, October 23

தவம் – விமர்சனம்

Loading

சென்னையில் சிட்பண்ட் நடத்தும் சந்தான பாரதி, தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை கொடுத்து தன் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடுகிறார். அன்னை வயல் என்ற அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டதும் கதாநாயகி பூஜாஸ்ரீ மனதில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி.
திட்டமிட்டபடி அனைவரும் அந்த கிராமத்துக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும்போதுதான் பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடன் இருந்த உறவு தெரிய வருகிறது.
தற்போது விவசாயம் பட்டுப்போயிருந்தாலும், ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாகத்தான் இருந்திருக்கிறது அந்த கிராமத்தில்.
விவசாயத்தை தவம்போல் நினைத்து செய்யும் சீமான், ஊர் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வருபவர். கிராமத்து தாதாபோல் வலம் வரும் விஜய் ஆனந்த், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று அந்த கிராமத்தில் தொழிற்சாலை கட்ட துணை நிற்கிறார். இதற்காக அரசு அதிகாரியான போஸ் வெங்கட்டுடன் சேர்ந்து நயவஞ்சகமா ஊர் மக்களை ஏமாற்றி, நூறு ஏக்கர் நிலத்தை வாங்க முயற்சிக்கிறார்.
இராசயனக் கழிவுகளால் விளை நிலங்கள் எப்படி வீணாகும் என்பதை மக்களுக்கு சீமான் புரிய வைக்க, பிரச்னை ஏற்படுகிறது. விளைவு…அடியாட்கள் துணையுடன் சீமானைக் கொன்று விடுகின்றனர். சிறுவனான தன் மகனிடம் விவசாயிகளையும் இந்த மண்ணையும் நீதான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு கண்ணை மூடுகிறார் சீமான்.
வளர்ந்து பெரயவனாகும் அந்த மகன்தான் நாயகன் வசி. பூஜாஸ்ரீயுடன் சிறு வயதிலேயே இவருக்கு பழக்கம் உண்டு. பிறகென்ன பூஜாஸ்ரீயுடன் காதல்தான்.
இந்த இளம் காதலர்கள் பிரச்னை மற்றும் ஊர் பிரச்னைகள் எவ்வாறு முடிவுக்கு வருகின்றன என்பதுதான் மீதி கதை.
கதாநாயகன் வசி மற்றும் பூஜா இருவரும் புதுமுகங்களைப் போலவே இல்லாமல் அனுபவப்பட்ட நட்சத்திரங்களைப்போல் நன்றாக நடித்திருக்கின்றனர். வசி இளமைத் துடிப்புடன் காதல் காட்சிகளிலும், வேகத்துடன் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். பூஜாவும் வெறும் அழகுப் பதுமையாக வந்து செல்லாமல் வாய்ப்பு கிடைத்த காட்சிகளில் எல்லாம் நன்கு நடித்திருக்கிறார்.
படத்தை இயக்கய இரட்டையர்களான
விஜய் ஆனந்த் மற்றும் சூர்யன் இருவருமே படம் முழுவதும் வரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் ஆன்ந்தின் வில்லத்தனம் பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்டது என்றாலும், சூரியன் ஏற்ற நகைச்சுவை வேடம் ரசிக்க வேக்கிறது.
நடேசன் வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும் சீமான் பேசும் வசனங்கள் சிந்த வைக்கிறது. இவற்றை பிரச்சார தொனி தெரியாமல் காட்சிக்குப் பொருத்தமாகப் புகுத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.
படத்தின் முதல் பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் வேல் முருகன்தான். பச்சை வயல்கள் நிரம்பிய கிராமத்துக் காட்சிகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவான பாடல்கள் சுமார் ரகம்தான்.
முதல் பாதி கலகலப்பாகச் செல்லும் படம் பின் பாதியில் சீரியசாகிவிடுகிறது. காட்சிகள் சிலவற்றை நீக்கி, படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருந்தால் தவம் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும்.