Monday, August 31

டைனோசர்ஸ் — திரைப்பட விமர்சனம்

Loading

உதய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் டையனோசர்ஸ் திரைப்படத்தில், ‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி, மாரா, மானேக்‌ஷா, சாய்பிரபா தேவா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிரபல நடிகர் நடிகை யாரும் இல்லை என்றாலும் அறிமுக நடிகர்களை வைத்து தொய்வில்லாத திரைக்கதை அமைத்து கலகலப்பான ஒரு திரைப்படத்தை போர் அடிக்காத வகையில் தர முடியும் என்பதை தன் முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் அறிமுக இயக்குநர் மாதவன்.

எப்போதும் ரணகளமாக காட்சியளிக்கும் வட சென்னை பகுதியில் கணவனை இழந்த ஜானகி தன் மகன்கள் கார்த்திக் மற்றும் ரிஷி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கூலிப்படைத் தலைவன் மானேக்‌ஷா, இளஞர்கள் சிலரை வைத்துக்கொண்டு குத்து,வெட்டு கொலை என செய்து வருகிறார்.
மானேக்‌ஷாவைப்போல் மற்றொரு ரவுடியான அருண், ஒரு கொலை வழக்குக்காக தன்னிடம் உள்ள சில அடியாட்களை போலீசில் சரண் அடையச் சொல்கிறார். அவரகளில் முக்கியமானவர் மாறா.
மாறாவின் உயிர் நண்பன் ரிஷி. சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு இந்த தொழிலில் இருந்தே விலகி இருக்கும் மாறா சரண்டர் ஆனால் மணவாழ்க்கை கெட்டுவிடும் என்று சொல்லி ரிஷி நண்பனுக்கு பதில் போலீசில் சரண்டர் ஆகிறார்.
ரிஷி சரண்டர் ஆன வழக்கில் கொலையுண்டது மானேக்க்ஷாவின் தங்கையின் கணவர்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மாறா, மானேக்க்ஷாவின் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தங்கையின் கணவனை கொன்றவன் மாறா என்பதை மானேக்ஷா டிரைவர் மூலம் கண்டுபிடித்து விடுகிறார்.
தன் தங்கையின் கணவனை கொன்றவன் தன் வீட்டிலே வந்து தனக்கு எதிரே அமர்ந்து அமர்ந்திருப்பதை கண்டு வெகுண்டு எழுந்து வெறியுடன் கொல்லத் துடிக்கிறார். மாறாவை காப்பாற்ற உதய்கார்த்திக் செய்யும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைய மானேக்‌ஷாவின் ஆட்கள் நடுரோட்டில் வைத்து மாறாவை கொடூரமாக கொலை செய்து விடுகின்றனர்.


இரண்டு ரவுடி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் எப்படி முடிவுக்கு வந்தது? இரு குழுவிற்கு நடுவிலும் சிக்கிக்கொண்ட உதய் கார்த்திக் என்ன செய்தார் என்பதை சுவைபட விவரிக்கும் படம்தான் டைனோசர்ஸ்.

இந்தப் படத்தின் சிறப்பம்சமே படம் முழுக்க விரவியிருக்கும் நகைச்சுவை காட்சிகள்தான்.

அதிலும் சீரியஸான காட்சிகள் நடக்கும் போது வரும் நகைச்சுவை அப்பப்பா…அமர்க்களம். அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை நடக்கும்போது வரும் காமெடி இருக்கிறதே… அபாரம்!

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் கஞ்சா போதையில் இருக்கும் மானேக்‌ஷா வெற்றிடத்தில் கைகளை வீசிக்கொண்டிருக்க “அவன் யாருடன் சண்டை போடுகிறான்…? என நாயகன் கேட்க அதற்கு ஒருவர் “உன்னுடன் நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கான்…” என்று பதில் சொல்வது அதிரி புதிரி காமெடி.
அதைப்போலவே “அல்லா… கோயிந்தா… அல்லேலூயா…” என்று பக்தி கோஷம் மாதிரி வேகமாக சொல்லிக் கொண்டே போகையில், இடையிடையே “மதர் தெரசா…திரிஷா…” என்றெல்லாம் வருவது வேறு லெவல் காமெடி.

“ஒயிட் ஷீட்டுக்கு எதுக்கு ஜெராக்ஸ்” என்பது போன்ற ரசிக்க வைக்கும் வசனங்கள் படம் முழுவதும் நிறையவே இருக்கின்றன.
அதே சமயம் எதுகை மோனைக்காக எழுதப்பட்ட “ஏரியாவிலிருந்து சிரியாவரை…” போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

ஜோன்ஸ் வி.ஆனந்தின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இரவுக் காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் பாடல்களை இயக்குநர் மாதவனே எழுதியிருப்பதால் அர்த்தமுள்ள வாரத்தைகளில் கருத்தாழத்துடன்  பாடல் அமைந்திருக்கிறது.

நாயகியை உஷார் பண்ணிக் காட்டுகிறேன் பார்… என நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு, பைக்கை வேகமாக ஓட்டியபடி, திவ்யா என சாலையிலேயே பெயர் எழுதும் காட்சி நாயகியை மட்டுமல்ல நம்மையும்தான் இம்ப்ரஸ் பண்ணுகிறது.

படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணனின் ஷார்ப்பான கத்தரிக்கோல் கச்சிதமாகப் பணி செய்து படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

வித்தியாசமான திரை அனுபவத்தைத் தரும் டைனோசரஸ் படத்தை அனைவரும் தாராளமாகக் கண்டு மகிழலாம்.

மிப்பெண் 3.5/5