Wednesday, March 11

டி என் ஏ _ விமர்சனம்

Loading

டி என் ஏ _ விமர்சனம்

நாயகன் அதர்வா காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் முழு நேர குடிகாரனாகி தன் குடும்பத்தாருக்கு பாரமாக இருக்கிறார்.

மற்றொருபுறம் மனவளர்ச்சியில் முதிர்ச்சியே இல்லாத பருவப் பெண்ணான நிமிஷா சஜயன் திருமணம் பலமுறை தள்ளிப் போகிறது.

விதியின் விளையாட்டோ என்னவோ இந்த இருவருக்கும் பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இரண்டு மைனஸ்கள் இணைந்து ஒரு பிளஸ் ஆவது போல் அதர்வாவும் நிமிஷாவும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு ஓர்  அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் வந்திருக்கும் புதிய வரவு குறித்து எல்லோரும் சந்தோஷத்தில் திளைக்க,  நிமிஷாவிடம் குழந்தையை காட்டும் போது, அது தன் குழந்தை அல்ல என்று மறுக்கிறார் அவர்.

அதர்வா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் நிமிஷா சொல்வதை ஆரம்பத்தில் மறுத்தாலும், பின்னர் அதில் உண்மை இருக்குமோ என்று ஐயப்பட ஆரம்பிக்கின்றனர்.

பிறந்த குழந்தைகள் திருடப்படுவது பரவலாக நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும், இங்கே அதர்வா _நிமிஷா தம்பதியின் குழந்தை மாற்றப்பட்டிருக்கிறது.

குழந்தையை மாற்றியது யார்?  எதற்காக அந்த குழந்தை மாற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் டிஎன்ஏ படத்தின் கதை.

மாற்றப்பட்ட குழந்தையின் தாயாக உணர்ச்சிகரமான பாத்திரத்தில் உச்சகட்ட பரிதாபத்தை வரவழைக்கும் வகையில் மிகச் சிறப்பாக நடித்து நம் மனதில் இடம் பிடிக்கிறார் நிமிஷா சஜயன்.

தன் கைக்கு வந்த யாரோ பெற்ற குழந்தையை அதன் உண்மையான தாயிடம் கொடுத்த பிறகு, குழந்தையை மறக்க முடியாமல் அந்தக் குழந்தை பற்றிய நினைவிலேயே அல்லல்படும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார் நிமிஷா.

அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார் அதர்வா.

போலீஸ்காரராக வரும் பாலாஜி சக்திவேலும் யதார்த்தமான நடிப்பில் நம் கவனத்தை ஈர்க்கிறார்.

படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கும் திரைக்கதைக்கு இடையூறு செய்யாத வகையில் பார்த்திபனின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாகவே அமைந்திருக்கிறது.

படத்தின் உயிர் நாடியே அதர்வா _நிமிஷா தம்பதியின் குழந்தை மாற்றப்படுவதுதான்.
ஆனால் அதற்கு பிற்பகுதியில் சொல்லப்படும் காரணம் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

ராசிப்படி குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் குழந்தைதான் தனக்குத் தேவை என குழந்தை திருடும் கும்பலிடம் ஒரு பணக்காரர் கேட்பதால், அந்த நேரத்தில் பிறந்த அதர்வாவின் குழந்தை மாற்றப்படுகிறது.

யாரோ ஒரு தாய் பெற்ற குழந்தையை திருடி வந்து அதர்வாவின் மனைவியிடம் வைத்து மாற்றியதற்கு பதில் திருடிய குழந்தையே அந்த பணக்காரரிடம் கொடுத்திருக்கலாமே என்று கேட்டால் அந்தக் கேள்விக்கு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் என்ன பதில் சொல்வார்?

கத்தி, அரிவால், துப்பாக்கி, ரத்தம், பழிக்குப் பழி என்று அரைத்த மாவையே விதவிதமாக அரைத்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக அமைந்த கதை களத்துக்காகவும், நட்சத்திரங்களின் அருமையான நடிப்புக்காகவும் டிஎன்ஏ படத்தை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.