![]()
திரெளபதி – விமர்சனம்
நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும், பெரும் பொருள் செலவில் உருவாகும் படங்களுக்கும் திரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பான விளம்பரங்கள் கிடைப்பது வழக்கம்தான் என்றாலும், ‘திரெளபதி’ போன்ற குறைந்த பட்ஜெட் படம் திரைக்கு வரும்முன்பே பரபரப்பைக் கிளப்பியது மிக அரிதாக நடைபெறக்கூடிய விஷயம்தான். கிரவுட் பண்டிங் முறையில் குறைந்த செலவில் தயாரான ‘திரெளபதி’ திரைப்படம் தரமான முறையில் உருவாக்கப்பட்ட படம் என்றே சொல்லலாம்.
பரபரப்பைக் கிளப்பக்கூடிய கதையம்சம் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநர் மோகனை பாராட்டலாம். அதையும் கத்தி மேல் நடப்பதுபோல் நேர்த்தியாக திரையில் சொன்னதற்காக ஒரு பாராட்டு விழாவையே நடத்தலாம்.
நாயகன் ரிச்சர்ட் தனது மனைவி ஷீலா மற்றும் மனைவியின் ஒன்று விட்டதங்கையையும் (சித்தப்பா மகள்) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வருகிறார். நண்பன் உதவியுடன் சென்னையில் தங்கி, உண்மையில் மனைவியை கொன்றவனைப் பழி வாங்கத் திட்டமிடுகிறார்.
மிகச் சரியாகத் திட்டமிட்டு மனைவியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த டுபாக்கூர் வழக்கறிஞர் ஒருவரையும், ஜாதியின் பெயரில் கட்சி நடத்தும் அரசியல்வாதி ஒருவரையும் கொல்கிறார்.
காவல் துறை அதிகாரி ரிச்சர்டைப் பிடித்து விசாரணை நடத்தும்போது, தன் மனைவி உயிரோடு இருப்பதும், நினைவிழந்த நிலையில் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் அந்த அதிகாரி மூலமே ரிச்சர்டுக்குத் தெரிய வருகிறது. இப்படி விரியும் கதையின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றும் மெதுவாக அவிழ்கின்றன.
கதையின் பிரதான பாத்திரமான ருத்ர பிரபாகரன் வேடத்துக்கு ரிச்சர்டின் உயரமும் உடல்கட்டும் நன்கு பொருந்திப் போகிறது. தனது உடல் மொழி மூலம் மேலும் அந்தப் பாத்திரத்துக்கு மெருகூட்டி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முன் பல படங்கில் இவர் சிறப்பாக நடித்திருந்தாலும், சரியான பிரேக் கிடைக்காமல் குடத்திலிட்ட விளக்காக இருந்த இவர் திரெளபதி படத்துக்குப் பிறகு குன்றிலிட்ட விளக்காகத் திகழ்வது திண்ணம்.
இவரது மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ஷீலா அநீதிகளைக் தட்டிக் கேட்கும்போது கொஞ்சம் ஆக்ரோஷமாகவும், கணவருடன் பேசும்போது அன்பு பொங்கவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.
மற்றும் செளந்தர்யா, சேசு, லெனா குமார், ஆறுபாலா, அம்பானி சங்கர் , ஜே.எஸ்.கே.கோபி, ஆகியோரையும் சிறப்பாக நடிக்க வைத்து நன்கு வேலை வாங்கியிருக்கிறரா் இயக்குநர் மோகன்.ஜி.
மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக துணை நிற்கிறது. படத்தின் நீளம் சற்றே அதிகமாக இருப்பதை தேவராஜின் விறுவிறுப்பான படத்தொகுப்பு மறைத்து விடுகிறது. அந்த அளவுக்கு பார்வையாளர்களை துவக்கம் முதல் இறுதிவரை எங்கேஜ் செய்து வைக்கிறது படத்தின் திரைக்கதையும் தேவராஜின் படத்தொகுப்பும்தான்.
ஜூபின் இசையில் உருவான குக்கூ குக்கூ பாடல் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது. இது தவிர பட்டனத்தார் பாடல் ஒன்றும் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மோகனே படத்தின் கதை,திரைக்கதை, வசனங்களையும் எழுதியிருக்கிறார். வசனங்கள் பல இடங்களில் சாட்டையடியாக இருக்கின்றன.
பிரச்சார தொனியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதையும், வேளாண்மையின்
முக்கியத்துவத்தையும் கதாபாத்திரம் மூலமும் காட்சியமைப்பு மூலமும்
சொல்லியிருப்பது ரசிக்கத் தக்க விதத்தில் அமைந்திருக்கிறது.
துணிச்சலான கதைக்காகவும் அதை திறம்பட திரை சொல்லிய விதத்துக்காகவும் பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம் திரெளபதி
மதிப்பெண் 4/ 5

