Wednesday, September 23

எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு _ விமர்சனம்

Loading

நடிகர்கள் : ஷரத், ஐய்ரா, மதன் தக்‌ஷினாமூர்த்தி, கஞ்சா கருப்பு, இளையா, நரேன்

இயக்கம்: ஹரி உத்ரா

இசை: அலி மிர்சாக்

ஒளிப்பதிவு: வினோத் ராஜா

கால்பந்து விளையாட்டு திறமையால் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை மையப்படுத்திய கதை.

அன்றாட வாழ்க்கையே நகர்த்த அல்லல்படும் சிலரின் மகன்கள் கால்பந்து விளையாட்டில் திறமையாக இருப்பதை கண்டு,  வாத்தியார் என்று அழைக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மாவட்ட அளவில் விளையாட தயார் செய்ய  முனைப்பு காட்டுகிறார்.

விளையாட்டு மூலமே வேலை வாய்ப்புக்களை பெற்று வாழ்க்கையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

உள்ளூர் தொழிலதிபர் கம் ரவுடியான
ரத்தினம் என்பவர் இந்த இளைஞர்கள் விளையாட போய்விட்டால் தன் கம்பெனிக்கு(?)  வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்(!)  என்று தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறாமல் தடுக்கிறார்.

இதற்கு நியாயம் கேட்ட வாத்தியாரை கொலை செய்ய, வெகுண்டெழுந்த இளைஞர்கள் வில்லன் குரூப்பை பழிவாங்குகிறார்கள்.

இதுவரை விளையாட்டு தொடர்பான திரைப்படங்களில்தான் ரத்தம், கத்தி அரிவாள் இல்லாமல் இருந்தது… இப்போது அதிலும் கொண்டு வந்து விட்டார்கள்.

நல்ல கதைக் கருவை கையில் எடுத்த இயக்குனர்,  மோசமான திரைக்கதையாலும் வலுவில்லாத காட்சிகளாலும் படத்தை பலவீனப்படுத்தி விடுகிறார்.

“…இன்னமும் எவ்வளவு காலம் ஆதிக்க சக்திக்கு அடிபணிந்து போக வேண்டும்…” என்று ஆரம்பித்து முழ நீள வசனம் திரும்பத் திரும்ப பலமுறை வந்து ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறது.

நடக்கவே ஊன்றுகோல் தேவைப்படும் மாற்றுத்திறனாளி எதற்காக திக்கித் திணறி பேசுபவராக காட்டப்பட வேண்டும்… சிம்பதிக்காகவா?

விளையாட்டு வீரர்களை ரவுடிகள் குழு வெட்டி சாய்ப்பதற்காக துரத்துவது, ஏதோ ஓடிப் பிடித்து விளையாடுவது போல் இருக்கிறது.

ரத்தனத்தை கொலை செய்ய வேண்டிய நாயகன் கர்ணா, படத்தின் துவக்கத்திலேயே ரத்தனத்தின் தம்பியை கொலை செய்வது ஏன்?

அரசு அதிகாரி ஒருவர் ” மும்பாய் டீமில் அவரை போடலாம்…  பூனா கோல் கீப்பராக இவரை போடலாம்…” என்றெல்லாம் பல மாநில குழு வீரர்களை தீர்மானிக்க முடியுமா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் தோன்றுகின்றன.  போதாக்குறைக்கு கதையுடன் ஒட்டாத  (ரசிகர்களின் மனதிலும்தான்) ஒரு காதல் டிராக் வேறு…

மொத்தத்தில் அரைவேக்காடு திரைப்படம் ‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ .

மதிப்பெண் 1/5