லெவன் _ விமர்சனம்
தொடர் கொலைகளில் ஈடுபடும் சைக்கோ கொலையாளிகளை பற்றி எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் அதே ஜர்னரில் வெளிவந்திருக்கும் லெவன் படம் முற்றிலும் மாறுபட்ட கதை கருவை கொண்டிருக்கிறது.
அதுவே படத்திற்கு தனித்தன்மையை கொடுத்து விறுவிறுப்பையும் கூட்டி இருக்கிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரியான நாயகன் நவீன், தனக்கு கொடுக்கப்படும் சிக்கலான வழக்குகளையும் சிரமமின்றி அழகாக முடித்து வைக்கிறார்.
இந்த சூழலில் நகரத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முழுவதுமாக எரிந்த நிலையில் போலீசுக்கு கிடைக்கின்றன.
இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
எனவே தொடர்ந்து இந்த கொலைகளை புலனாய்வு செய்து கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு நவீனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நவீனுக்கு துணையாக இன்ஸ்பெக்டர் திலீபனும் உதவிகள் செய்கிறார்.
நவீன் நடத்தும் தொடர் புலனாய்வில் சிறுக சிறுக மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கின்றன.
கொலையாளியை நவீன் நெருங்க நெருங்க பார்வையாளர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தொடர்ந்து ஏற்படுகிறது.
கொலையாளி கண்டுபிடிக்கப்பட்ட பின் கொலைக்கான காரணமாக அவர் சொல்லும் சம்பவம் நெகிழ வைக்கும்படி அமைந்திருக்கிறது.
விரைப்பான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு நாயகன் நவீன் சந்திரா கச்சிதமாக பொருந்துகிறார். அவரது கடுகடு முகமும் உடல் மொழியும் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு நன்கு ஒத்துப் போகிறது.
மற்றும் அபிராமி, ரித்விகா, ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது.
டிமானின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டம் என்று சொன்னால் மிகையாகாது.
படத்தின் இரண்டாம் பாதியில் யாராலும் யூகிக்க முடியாத விஷயங்களை கொடுத்து பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வந்த இயக்குனர் லோகேஷ் அஜித் அவர்களுக்கு தனி பாராட்டு.
அனைவரும் கண்டு ரசிக்கலாம் வித்தியாசமான இந்த ட்ரில்லர் படத்தை.
மதிப்பெண் 3.5/5