![]()

இ எம் ஐ _ விமர்சனம்
பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல பொருட்களை தவணை முறையில் வாங்கி அவற்றுக்கு ஈ எம் ஐ கட்ட முடியாமல் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறை பற்றிய கதை இஎம்ஐ.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். காதலிக்கும் பெண்ணிடம் தன் இமேஜை உயர்த்திக்கொள்ள கடனில் பைக் வாங்கி வலம் வருகிறான். திடீரென எதிர்பாராமல் அவனது வேலை பறிபோகிறது.
வருமானம் இல்லாத காரணத்தால் பைக்குக்கான இ எம் ஐ யை கட்ட முடியாத நிலை.
கடன் கொடுத்த பைனான்சியர் பைக்கை பறிமுதல் செய்கிறார். இதற்குப் பிறகாவது அந்த இளைஞன் திருந்தினானா என்றால் அதுதான் கிடையாது.
காதலித்த பெண்ணை மணந்து கொண்டால் சந்தோஷமாக வாழ்வதற்கு கார் ஒன்றையும் தவணை முறையில் வாங்கி விடுகிறான்.
காருக்கான இஎம்ஐ கட்ட முடியாமல் மீண்டும் அவதி ஆரம்பமாகிறது. பல்வேறு அவமானங்களை சந்திக்கிறான். இவனது நடவடிக்கைகள் பிடிக்காமல் காதல் மனைவி பிரிந்து போக தாயாரும் விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அது மட்டும் இன்றி இவனுக்காக ஜாமின் கையெழுத்து போட்டவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த கடன் சூழலில் இருந்து இளைஞர் விடுபட்டானா இல்லையா என்பதுதான் இஎம்ஐ திரைப்படம். சகட்டு மேனிக்கு பொருட்களை வாங்கிவிட்டு அதற்கு இஎம்ஐ கட்டாமல் கட்ட முடியாமல் அவதிப்படும் வேடத்தில் நடித்திருக்கிறார் சதாசிவம் சின்னராஜ்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவரும் சதாசிவம் சின்ராஜ்தான்.
காதல் காட்சிகளில் கனிந்துருகும் சதாசிவம் சின்னராஜ், இ எம் ஐ கட்ட முடியாமல் அவதிப்படும் காட்சிகளிலும் பரிதாபத்தை வரவழைக்கும் வகையில் நன்றாகவே நடித்து பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.
நாயகியாக வரும் சாய் தன்யா கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார்.
பிளாக் பாண்டி, ஆதவன் நகைச்சுவை பெரிய அளவில் வொர்க் அவுட் ஆகவில்லை. லொள்ளு சபா மனோகரை இன்னும் எத்தனை படங்களுக்கு தான் இதே மாதிரி பார்த்துக் கொண்டிருப்பது என்று தெரியவில்லை. இயக்குனர் பேரரசு ஓ எ கே சுந்தர் கொடுத்த பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.
ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன.பின்னணி இசையிலும் படத்துக்கு உயிரோட்ட முடிந்தவரை முயன்றிருக்கிறார். பிரான்ஸிசின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
திரும்பத் திரும்ப இஎம்ஐ கட்ட முடியாமல் அவதிப்படுவது அதற்காக அவமானப்படுவது என்று காட்சிகள் போய்க் கொண்டே இருப்பது ஒரு சந்தர்ப்பத்தில் அலுப்பு தட்டுகிறது.
இதே பிரச்சினைகளுக்காக இன்னும் வலுவான காட்சிகளை அமைத்து திரைக்கதையை கொண்டு போயிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் என்று சொல்வார்கள். அது போல் நம் சம்பளத்திற்கு ஏற்ற வகையில் தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், சக்திக்கு மீறி இஎம்ஐல் பொருள்கள் வாங்கி அவதிப்படக்கூடாது என்று நல்ல கருத்தை சொன்னதற்காகவே இயக்குனர் சதாசிவம் சின்ராஜை தாராளமாக பாராட்டலாம்.
இந்த காலத்துக்கேற்ற படம். இளைஞர்கள் பலரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய படம்.

