![]()

எமோஜி – விமர்சனம்
இன்றைய இளைணைய தலைமுறையின் காதலும் பிரேக் அப்பும் கல்யாணமும் கதையாக்கப்பட்டு ஆஹா ஓடிடியில் எமோஜி என்ற பெயரில் வெப் சீரியஸாகியிருக்கிறது.
இளம் தலைமுறையினர் அவசரம் அவசரமாக காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதைவிட அவசரமாக பிரேக் அப் செய்து கொள்கின்றனர். “முன்பெல்லாம் அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் கல்யாணம்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் விவாகரத்தும் செய்து கொள்கிறார்கள்…” என்று துவக்க காட்சி ஒன்றில் வரும் வசனமே படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பதை புரிய வைக்கிறது.
திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன… கிடைத்திருக்கும் இந்த வெப் சீரிஸ் வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் பாருங்கள் என்று சொல்வதுபோல் நாயகன் வேடத்தில் வரும் மஹத் ராகவேந்திரா அசத்தலாக நடித்திருக்கிறார்.
தேவிகா சதீஷ், மானஸா செளத்ரி என்று இரண்டு நாயகிகள். விளையாட்டு்க்குத் தேவையான பொருள்களை மட்டுமே விற்கும் கடையில் விற்பனைப் பணிப்பெண்ணாக இருக்கும் மானஸா செளத்ரியை பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப அந்த ஸ்டோருக்கும் வந்து அசடு வழிந்து, தேவை இல்லாத விளையாட்டு பொருள்களை வாங்கிச் சென்று அதை ஓஎல்எக்ஸில் விற்பதாகட்டும், முதல் காதலிக்கு உருவுவதாகட்டும், இரண்டாவது காதலிக்கு ஏங்குவதாகட்டும் அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார் மஹத்.
அது சரி ஆரம்ப காட்சியில் விளையாட்டு விற்பனையகத்தில் மானஸா செளத்ரி ஏன் அரைக்கால் டிராயருடன் இருக்கிறார். விளையாடும்போது போட வேண்டிய காஸ்ட்யூமை விற்பனைப் பெண் போட்டுக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?
நாயகிகள் இருவருமே விளையாட்டு வீராங்கனைகள் போலும். மானஸா செளத்ரி நீச்சல் குளத்தில் அழகாக டைவ் அடிப்பதையும், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை ஸ்டைல் நீச்சல் பயிற்சிகளை செய்வதையும் ரசிக்கலாம் என்றால், தேவிகா சதீஷ் தன் காலை தூக்கி எதிரே இருப்பவரின் தோள் மீது போடுவதைப் பார்த்து ஆச்சரியப்படலாம்.
காதலர்கள் கட்டிப் பிடிப்பதைத்தான் சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால் கட்டிப் பிடிக்கும் பிசினஸே எமோஜியில் இல்லை. ஒடிவந்து நாயகன் மீது பாய்ந்து அவன் இடுப்பில் ஏறி அமர்ந்து கொள்ளும் நாயகிகளை எமோஜியில் பார்த்தால் எமோஷனாக வேண்டியிருக்கும்.
படத்தில் பாராட்ட வேண்டிய முதல் நபர் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்தான். பசுமை போர்த்திய பரந்துபட்ட கிராமத்து வயல்களுக்கு நடுவே டிராக்டர் வருவதை அவர் கம்போஸ் பண்ணியிருக்கும் விதம் கொள்ளை அழகு. பல காட்சிகளில் தன் முத்திரையைப் பதித்து யார் இந்த கேமராமேன் என்று கேட்க வைத்திருக்கிறார்.
வாழும் காலத்தையும் வசிக்கும் சூழலையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட கதையை கவர்ச்சிகராமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சென்.எஸ்.ரங்கசாமி.
இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல …எல்லா தலைமுறைக்கும் பிடிக்கும் சீரிஸ்தான் எமோஜி.
