![]()

சிறு வயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்துவிட்ட லிங்கேஷ், மாமன் மதுசூதனன் ஆதரவில் வளர்ந்து மீன்பிடித் தொழிலை செய்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே ஒன்றாக லிங்கேஷுடன் வளர்ந்து வரும் மதுசூதனின் மகள் திவ்யா தன் மாமன் லிங்கேசன்தான் தனது உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார்.
மாமன் மீது அளவு கடந்த காதலை வைத்து இருக்கிறார் திவ்யா. தமிழக கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு குழுவினருக்கு கிராமத்தை சுற்றி காட்டுவது, ஆட்களுடன் கலந்துரையாட செய்வது என்ற பொறுப்பை லிங்கேசுக்கு வழங்குகிறார் மதுசூதனன்.
வெளிநாட்டில் இருந்து வரும் குழுவில் இருக்கும் நீ லியாவ என்ற பெண்ணும் லிங்கேஷும் ஆரம்பத்தில் சாதாரணமாக பழகினாலும் பின்னர் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்து, ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.
மாமன் லிங்கேஷை மணந்து கொண்டு மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த திவ்யாவுக்கு பேரிடியாக தலையில் வந்து இறங்குகிறது லியா லிங்கேஷ் காதல்.
இந்த முக்கோண காதலில் முடிவு என்ன?
லிங்கேஷ் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது படத்தின் பிற்பகுதி.
நாயகன் லிங்கேஷின் முகத்தோற்றமும் உடல் மொழியும் மீனவர் வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது. கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார்.
மாமன் மீது பாசத்தை பொழிவதாகட்டும், மாமன் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாரோ என்று மனம் உடையும் காட்சியாகட்டும் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் திவ்யா. வெளிநாட்டுப் பெண் வேடத்தில் நடித்திருக்கும் லியாவும் கவனம் இருக்கிறார். லிங்கேஷை காதலிக்க ஆரம்பித்த பிறகு புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்திவிட்டு நமது கலாச்சாரப் பெண்ணைப் போல் புடவை அணிந்து வாழ நினைப்பது கவனம் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை பெரிதாக பாராட்டும்படி இல்லை என்றாலும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை.
படத்தை இயக்கி இருப்பவர் ஜெயலட்சுமி.
நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் பலமான திரைக்கதை அமைத்து இன்னும் விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கலாம்.

