![]()

குட் பேட் அக்லி _ விமர்சனம்
அஜித் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை கலக்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய டானாக திகழ்ந்திருக்கிறார் ஏ கே என்ற அஜித் குமார்.
மனைவி திரிஷாவுக்கு குழந்தை பிறந்த போது அதை பார்க்க ஆவலுடன் சென்ற அஜித்துக்கு தடை விதிக்கிறார் திரிஷா. டான் வாழ்க்கையின் கருப்பு நிழல் தன் மகன் மீது விழக்கூடாது என உறுதியாக த்ரிஷா சொல்ல, போலீசில் சரணடைந்து சிறைச்சாலைக்கு செல்கிறார் அஜித்.
அஜித் ஒரு பிஸ்னஸ் மேன் என்று சொல்லி ஸ்பெயின் நாட்டில் தன் மகனை வளர்த்து வருகிறார் த்ரிஷா .
செல்வாக்கு மிக்கவரான அஜித், சிறைச்சாலையில் இருந்தபடியே வீடியோ காலில் அவ்வப்போது மகனுடன் பேசுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகி மகனை காண ஸ்பெயின் செல்லும் அஜித்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அஜித்தின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இத்தனை ஆண்டு காலம் சிறையில் இருந்த தந்தை வெளியே வரும்போது மகன் சிறைக்குச் செல்கிறார்.
மகன் சிறைக்கு சென்றிருப்பது எதிரிகளின் திட்டமிட்ட செயல் என்று அஜித்துக்கு தெரிய வருகிறது. யாருக்காக தனது பழைய டான் வாழ்க்கையைத் துறந்தாரோ அதே வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கிறார் அஜித்.
மகனுக்காக மீண்டும் ஆயுதங்களை கையில் எடுக்கிறார்.
தன் மகன் மீது சுமத்தப்பட்ட பொய்க்குற்றங்களில் இருந்து எப்படி விடுவித்து சிறையில் இருக்கும் மகனை காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
படம் முழுக்க அஜித்தின் அதிரடி ஆட்டமே அமர்க்களமாக அரங்கேறி இருக்கிறது. மகனை மீட்க எதிரிகளுடன் போராடும் காட்சிகள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் அஜித், மனைவி த்ரிஷாவிடமும் மகனிடமும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நெஞ்சில் நிறைகிறார்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளமையான அஜித் காட்சிகள் 18 வருடங்களுக்கு முன்பு எடுத்த காட்சிகளை போல் இருக்கின்றன.
விஜய் வேலு குட்டியின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக வெகுவாக உதவி இருக்கிறது. அஜித்துக்கு வில்லனாக இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.
அவரது வசன உச்சரிப்பும் உடல் மொழியும் ஏற்ற பாத்திரத்தை மெருகேற்ற வெகுவாகவே உதவியிருக்கிறது. இரட்டை சகோதரர்கள் ஒரே அடையாளத்துடன் உலா வந்து மற்றவர்களை ஏமாற்றுவதும் நிழலான காரியங்களில் ஈடுபடுவதும் ரசிக்கும் படி இருக்கிறது.
நாயகி வேடத்தில் திரிஷாவுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.
ஜாக்கி ஷெராஃப்பை இவ்வளவு சின்ன வேடத்தில் பயன்படுத்தி வீணடித்து இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
முந்தைய படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஆங்காங்கே பழைய பாடல்களை தூவி ரசிக்கும் படியான காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அருமையான திரை விருந்து குட் பேட் அக்லி திரைப்படம்.
மதிப்பெண் 4.5/5

