Tuesday, September 15

குட் டே_ விமர்சனம்

Loading

குட் டே_ விமர்சனம்

தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார் பிரித்விராஜ்.

அந்த நிறுவனத்தின் மேலாளர் செய்யும் தவறுகளை பிரித்விராஜ் தட்டிக் கேட்டதால் அவமானப்படுத்தப்படுகிறார்.

தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளருடனும் பிரச்சனை ஏற்படுகிறது.

அவரது சம்பளம் வங்கிக் கணக்குக்கு வந்ததும் தன் தாயாருக்கும் மனைவிக்கும் பணம் அனுப்பிவிட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்.

சொந்தப் பிரச்சினை,  அலுவலகப் பிரச்சனை என்று பல்வேறு மன அழுத்தங்களில் இருக்கும் பிரித்திவிராஜ்,  அன்று இரவு முழுவதும் தொடர்ந்து குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் தான் குட் டே திரைப்படம்.

கல்லூரியில் உடன் படித்த தோழி ‘மைனா’ நந்தினிக்கு போன் செய்து பேசுகிறார் பிரித்விராஜ்.
இதனால் நந்தினிக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

நிறை போதையில் மேம்பாலம் ஒன்றில் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்லும் பிரித்திவிராஜை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறார்.

ஒரு பெண் குழந்தை காணாமல் போவதாக தகவல் வர அந்த பிரச்சனையில் போலீசார் கவனம் செலுத்தும்போது கைதி ஒருவன் தப்பி சென்று விடுகிறான்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டரின் யூனிஃபார்மை அணிந்து கொண்டு வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறி விடுகிறார் பிருத்விராஜ்.

தொடர்ந்து அவர் சந்திக்கும் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டுடன் சேர்ந்து குடித்துவிட்டு பனியன் ஃபேக்டரி மேலாளர் வீட்டுக்கு சென்று தகராறு செய்கிறார்.

சுடுகாட்டுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளியிடம் இருந்து மது பாட்டிலை பெற்று மீண்டும் குடிக்கிறார்.

இந்த போதை ஆட்டத்தின் முடிவு தான் என்ன?
காணாமல் போன குழந்தை கிடைத்ததா என்பது படத்தின் பிற்பகுதி.
கதையின் நாயகனாக வரும் பிரித்விராஜ் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.

குடிகாரனின் உடல் மொழி, பேசும் தொனி, வார்த்தை தடுமாற்றம் என ஒன்று விடாமல் அனைத்தையும் அப்படியே தன் நடிப்பில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்.
ஆட்டோ டிரைவராக ஓரிரு காட்சிகளே வந்தாலும் காளி வெங்கட், நடிப்பில் தன் முத்திரையை பதிக்க தவறவில்லை.

கல்லூரியில் படிக்கும் போது காதலை சொல்லாதவன் தனக்குத் திருமணமாகி கைக்குழந்தையுடன் இருக்கும் போது காதலை சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் தவிக்கும் பெண் வேடத்தில் மைனா நந்தினி வெகு சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

” அப்போது நீ காதலை சொல்லாமல் இருந்ததும் தப்பு…இப்போது நீ சொல்வதும் தப்பு… “என்று நண்பனுக்கு மெசேஜ் அனுப்பும் நந்தினி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிரித்விராஜ் கூறும்போது “செத்து தொலைடா… “என்று மனம் வெதும்பி சொல்கிறார்.

அந்த அளவுக்கு எல்லோரையும் குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார் பிருத்விராஜ்.

ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் இருட்டிலேயே படமாக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சவாலான காட்சிகளை நேர்த்தியான முறையில் ஒளிப்பதிவு செய்த கேமராமேன் மதன் குணதேவ் பாராட்டுக்குரியவர்.

கோவிந்த் வசந்தாவின் இசை கதையை தொந்தரவு செய்யாமல் படத்துடன் இணைந்து இயல்பாக பயணிக்கிறது.

மதுவுக்கு அடிமையானவர்களின் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளை யதார்த்தமான காட்சிகள் மூலமாகவும், மெலிதான நகைச்சுவை வழியாகவும் காட்டிய இயக்குனர் அரவிந்தன் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு எளிமையான வழிமுறை ஒன்றை படத்தின் இறுதியில் சொல்கிறார்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தும் நாளே அவர்களுக்கு குட் டே.

‘குட் டே’ திரைப்படம் ஒரு குட் மூவி.