காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபடும் யோகிபாபுவுக்கு தோல்வியே ஏற்படுகிறது. எனவே சக்திமான் என்ற செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். மெட்ராஸ் மால் என்ற பிரபல வணிகவளாகத்தில் செக்யூரிட்டி பணியில் ஈடுபடும்போது, தீவிரவாதிகள் மக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பெரும் தொகை கேட்டு மிரட்ட, சாதாரண செக்யூரிட்டியாக இருக்கும் யோகி பாபு அவர்களை எப்படி மீட்கிறார் என்பதே கூர்கா படத்தின் கதை.
ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் கூர்கா படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆன்டன். இந்த முயற்சியில் அவர் முழு வெற்றியை பெற்றிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
முழு படத்தை ஒட்டுமொத்தமாகத் தாங்கிப்பிடிக்கிறார் யோகிபாபு. அவரது முகத்தோற்றமும் உடல் மொழியும் பெரிதும் ஒத்துழைக்கின்றன.
போகிற போக்கில் வசனங்கள் ஊடே வரும் நாட்டு நடப்பு செய்திகளும், அரசியல் சட்டயர்களும் பிரமாதம். குறிப்பாக, ‘சிஸ்டம் சரியிலைன்னு சொல்லுவிங்க’, ;ஆன்டி இந்தியன்’ போன்ற வசனங்கள் திரையரங்குளில் ஏற்படுத்தும் சிரிப்பலைகள் அடங்க வெகுநேரமாகின்றன. இதேபோல் அனுமதியின்றி செல்ஃபி எடுப்பரின் மொபைல் போனை அரசியல்வாதியாக வரும் மயில்சாமி தட்டிவிட்டுவிட்டு செல்வது அட்டகாசம்.
காமானந்தா மாதிரி காம லீலைகளில் ஈடுபட்ட சாமியார், அவரது காமலீலைகள் அடங்கிய கேசட்டை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனர் ஆகியோரையும்கூட விட்டு வைக்காமல் வைத்து செய்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆன்டன்.
பாடல்களில் பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், பின்னணி இசையில் அதை ஈடுகட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன்.
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தெருவையே அடைத்துக்கொண்டு கூர்கா இனத்தவர் இப்பிடி ஆட்டம்போடுவார்களா, போலீஸ் செலக்ஷன் இப்படி நடக்குமா என்று படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகளைப் பார்த்து கேள்வி கேட்காமல் படத்தை பார்க்க ஆரம்பித்தால் இந்த கூர்காவை வெகுவாகவே ரசிக்கலாம்.