Friday, January 24

’கருடன்’ _ விமர்சனம்

Loading

’கருடன்’ திரைப்பட விமர்சனம்

பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் மண், பெண், பொன் என்பதை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் கருடன்.

சசிகுமார் – உன்னி முகுந்தன் இருவரும் பால்ய சிநேகிதர்கள். வளர்ந்த பிறகும் அதே பாசத்துடன் பழகுகிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், ஆதரவற்ற சிறுவனாக இருந்த சூரிக்கு, வசதியான சிறுவனான உன்னி முகுந்தன் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறார். இதன் காரணமாக சூரி வளர்ந்த பின்னும் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான அடிமையாகவே வாழ்கிறார்.

அதே நேரம், சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவராகவும் தன்னை நினைக்கிறார்.

இந்த நிலையில், சூழ்நிலை காரணமாக சசிகுமாருக்கு துரோகம் செய்கிறார் உன்னி முகுந்தன். சூரி நன்றிக்கடனுக்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா, அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் பக்கம் – நியாயத்தின் பக்கம் –  நின்றாரா என்பதை என்பதை அதிரடியாக சொல்வது தான் ‘கருடன்’ கதை.

சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவி கிராமத்து மனிதராக – முதலாளிக்கு நன்றிக்கடன் பட்ட ஊழியராக வந்து பணிவு காட்டுகிறார் சூரி. அதே நேரம் ஆக்ரோசத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
யார் எந்த விசயத்தைக் கேட்டாலும், வாய் மூடி மவுனமாக இருக்கும் சூரி.. முதலாளி கேட்டால் கடகடவென நடந்ததை ஒப்பிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இவர்தான் கதை நாயகன் என்றாலும் முதல் பாதியில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவருக்கும் வழி விட்டு இருக்கிறார். அதே நேரம் இரண்டாம் பாதியில் கதை நாயகனாக பிரம்மாண்டம் காட்டுகிறார்.

வழக்கம் போலவே, சசிகுமார் நியாயமான மனிதராக – நட்புக்காக உயிரையும் கொடுக்கும் தியாகியாக – வருகிறார். இவரது நண்பராக வரும் உன்னி முகுந்தனும் சிறப்பாக நடித்து உள்ளார்.

நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சரி.. அந்த நட்புக்கே துரோகம் செய்யும் நேரத்திலும் சரி தனது உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் உன்னி முகுந்தன்.

காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனிக்கு சிறப்பான கதாபாத்திரம். உண்மையைச் சொல்லவும் முடியாமல்.. சொல்லாமலும் இருக்க முடியாமல் அவர் தடுமாறும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயல்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சகா, ரோஷினி ஹரிபிரியன், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா, கிராமத்து பகுதிகளை அழகாக அள்ளித்தந்து உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

சூரி பங்கு பெறும் சண்டைக் காட்சிகள் வழக்கமான சண்டைக் காட்சிகளை போல் அல்லாமல் ஓரளவு இயல்பாக இருப்பது ரசிக்க வைக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

பிரதீப் இ.ராகவின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்.

 அதிகார பலம் மிக்க அமைச்சரின் ஆசை, உயிருக்குயிரான நண்பர்களைப் பிரித்து அவர்கள் வாழ்க்கையை பாழாக்குகிறது  என்பதை நல்ல கதையம்சம் கொண்ட படமாக அளித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். 

மொத்தத்தில், ‘கருடன்’ ரசிக்க வைத்து இருக்கிறான்.