Monday, October 5

ஹாட்ஸ்பாட் – விமர்சனம்

Loading

நடிகர், நடிகைகள் :

கலையரசன்
சோஃபியா
சாண்டி
அம்மு அபிராமி
ஜனனி
சுபாஷ்
கௌரி ஜி. கிஷன்
ஆதித்யா பாஸ்கர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து & இயக்கம் – விக்னேஷ் கார்த்திக்
ஒளிப்பதிவு – கோகுல் பினோய்
இசை – சதீஷ் ரகுநாதன் | வான்
படத்தொகுப்பு – முத்தையன் யூ

எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் என்று சொல்லத் தகுதியான படம் ஹாட்ஸ்பாட். எடுத்துக்கொண்ட கதையாகட்டும், அதைச் சொன்ன விதமாகட்டும் உண்மையில் மிகப் புதுமையாகவும் ரசிக்கத் தக்க வகையில் சொன்னதற்காக படத்தை எழுதி இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கை முதலில் பாராட்டிவிடலாம்.

இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு கதைகளை ஓர் இளைஞர் சொல்வது அப்படியே திரையில் கதையாக விரிகிறது.

Happy Married Life என்ற முதல் கதையில் காதலர்களான ஆதித்யா பாஸ்கரும் கெளரி கிஷனும் பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். தாலியில் தொடங்கி சமையலறையை நிர்வகிப்பதுவரை அனைத்தையும் இப்போது பெண்கள் செய்கிறார்கள் அல்லவா அதை அப்படியே உல்ட்டாவாக்கி ஆண்கள் செய்தால் எப்படி என்பதை இந்தக் கதையில் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். மாமியார் மருமகள் சண்டைக்கு பதில் மாமனார் மருமகன் சண்டை என ஒன்றையும் விடாமல் நகைச்சுவை விருந்தாக்கியிருக்கிறார்கள்.

Golden Rules என்ற அடுத்த கதையின் காதல் ஜோடி காதலர்களான ஆதித்யா பாஸ்கரும் கெளரி கிஷனும் திருமணம் செய்ய முடிவெடுக்கையில் அவர்கள் சகோதர உறவில் இருப்பது இருவருக்கும் தெரிய வருகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த செய்தியை எப்படி அந்தக் காதலர்கள் எதிர்கொண்டார்கள் என்பதுதான் தங்க விதி

Thakkali Cutney என்ற மூன்றாவது கதை சூழ்நிலை காரணமாக விபச்சாரம் செய்யும் இளைஞனைப் பற்றியது. தன் சுயரூபம் காதலிக்கு தெரியவரும்போது லவ், லஸ்ட் என்றெல்லாம் பேசி நியாயப்படுத்த நினைக்கும் காதலனை, காதலி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைப் பற்றிய அருமையான பகுதி. இந்தக் கதையில் இடம் பெறும் வசனங்கள் நம்மையறியாமல் கைகளை தட்ட வைக்கின்றன.

Fame என்ற நான்காவது கதை ஊடகவெளிச்சம் தங்கள் குழந்தைகள் மீது விழ வேண்டும் என ஆர்வம் காட்டும் பெற்றோர் பற்றியது. இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதை பதைபதைக்க வைக்கும் வகையில் கொடுத்து, இந்தக் கால பெற்றோர்களுக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஹை லைட்டே இந்தக் கதைதான் என்றால் மிகையாகாது.

கதை சொல்ல வந்த இளைஞனுக்கும், கதை கேட்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஓர் அருமையான ட்விஸ்ட்டை வைத்திருப்பதும் ரசிக்கும்படி இருக்கிறது.

படம் முழுவதும் இழையோடும் மெலிதான நகைச்சுவை அட்டகாசம்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவும், சதீஷ் ரகுநாதன் இசையும் படத்தற்கு பக்க பலமாக இருக்கின்றன.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்தப் படம் அனைவரும் தவறாமல் காண வேண்டிய அருமையான படம்.

மதிப்பெண் 4/ 5