ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

0

 291 total views,  1 views today

ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

தனது சொந்த ஊரில் வசிக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்துபவர். தனது கண்டு பிடிப்புகளை அரசாங்கத்து அனுப்பி அங்கீகாரம் பெற முயலும் அவரது முயற்சிகள், அரசு அதிகாரிகளால் தோல்வி அடைகின்றன.

நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து இங்குள்ள நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபடத் திட்டமிடுகிறது. திட்டப்படி இரண்டு நகைக்கடைகளில் கொள்ளை அடித்து விடுகின்றனர்.

கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் செல்ல முற்படும்போது எதிர்பாராமல் அந்த நகைகள் இருக்கும் பை ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்து விடுகிறது. ஊழலில் ஊறிப்போன போலீஸ் அதிகாரி ஒருவர், கொள்ளையடித்த நகைகளில் பாதி பங்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொள்ளையர்கள் நகைப்பையை மீட்பதற்கு துணை நிற்கிறார்.

கொள்ளையர்களின் திட்டம் நிறைவேறாமல் எப்படி ஜி.வி.பிரகாஷ் தடுத்தார் என்பதுதான் கதை.
துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வின்றி விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றதற்காக இயக்குநர் ரவி அரசை முதலில் பாராட்ட வேண்டும்.

கோழிப் பண்ணையில் நடக்கும் அநீதியைக் கண்டு பொங்கி எழும் ஜி.வி.பிரகாஷ் அதன் உரிமையாளரை போலீசில் பிடித்துக் கொடுப்பது சரி…..எந்த கோழிப் பண்ணையில் உறித்த கோழிக்கு ஊசி போட்டு எடையை அதிகப்படுத்துவார்கள்?  அபத்தமான காட்சி இது.

ஒரே நபர் இரண்டு முறை நம் வழியில் குறுக்கிட்டுவிட்டான் எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு விவரமாக இருக்கும் கொள்ளையர் தலைவன், ஆழ் துளை கிணற்றில் விழுந்த நகையை எடுக்க, ஒரு குழந்தையைக் கடத்தி அதை வேண்டுமென்றேவா ஆழ்துழை கிணறுக்குள் போடுவான்?  கொக்கு தலையில் வெண்ணை வைத்து அதை பிடிக்கும் கதையாக அல்லவா இருக்கிறது இது.

படத்தில் முக்கியமாக குறிப்பிட்டே சொல்ல வேண்டிய அம்சம் சண்டைக் காட்சிகள். முன்னணியில் உள்ள நட்சத்திர நடிகர்களுக்குக்கூட இப்படி சண்டைக் காட்சிகள் அமைந்ததில்லை என்று தாராளமாக கூறலாம்.

இப்போதிருக்கும் ஜி.வி.பிரகாஷின் முகத்தோற்றமும் உடலமைப்பும் இந்தப் படத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷின் தோற்றத்துடன் ஒப்பிட்டால் படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் நன்றாகவே தெரிகிறது. ஆயினும் படத்தின் விறுவிறுப்பை அது எந்த விதத்திலும் குறைக்கவில்லை

ஜி.வி.பிரகாஷின் காதலி வேடத்தில் கதாநாயகியாக வரும் மஹிமா நம்பியாரைவிட, நண்பன் வேடத்தில் வரும் காளி வெங்கட்டுக்கு ஸ்பேஸ் அதிகம் கிடைத்திருக்கிறது. அவரும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

படத்தின் இறுதியில் புதிய கண்டுபிடிப்பாளர்களையும், அவரது கண்டுபிடிப்புகளையும் தொகுத்துக் காட்டியிருப்பது பிரமாதம்.

உரிய காலத்தில் வந்திருந்தால் பெரும் வெற்றி பெற்று ஜி.வி.பிரகாஷ் திரை வாழ்வின் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கும். அதனால் என்ன தாமதமாக திரைக்கு வந்தாலும் தரம் குறையா இந்த ஐங்கரனை தாராளமாகப் பார்த்து ரசிக்க ரசிக்கலாம்.

Better Late Than Never

மதிப்பெண் 5 3.5

Share.

Comments are closed.