Monday, April 20

இறுதி முயற்சி _ விமர்சனம்

Loading

இறுதி முயற்சி _ விமர்சனம்

ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காகவும், மகனின் இருதய ஆபரேஷன் செலவுக்காகவும் விட்டல் ராவிடம் எண்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார் ரஞ்சித்.

அசலுக்கு மேல் வட்டி கட்டியும் அசலும் அடையவில்லை வட்டியும் பாக்கி இருக்கிறது என்று விட்டல் ராவும் அவரது தம்பியும் ரஞ்சித் குடும்பத்தையே கொடுமைப்படுத்துகின்றனர்.

ரஞ்சித்தின் மனைவி மெகாலி மீனாட்சி குளிக்கும் போது விட்டல் ராவின் அடியாட்கள் எட்டிப் பார்ப்பதுடன் அதை வீடியோவாகவும் எடுக்கின்றனர்.

கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ரஞ்சித்தின் மகளான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று பகிரங்கமாக சொல்லி பயமுறுத்துகிறார் விட்டல்.

நண்பர்களிடம் பண உதவி கேட்கும் ரஞ்சித்திற்கு கைவிரித்து விடுகின்றனர் நண்பர்கள்.

எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ரஞ்சித்.

இது ஒருபுறம் இருக்க, முகத்தை மறைத்துக் கொண்டு தலைப்பாகை கட்டியிருக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன் பலரையும் கொலை செய்து காவல்துறைக்கு சவாலாக இருக்கிறான்.

எதிர்பாராமல் ரஞ்சித்தின் குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையிலேயே வந்து தங்கி விடுகிறான் அந்த சைக்கோ கொலைகாரன்.

ரஞ்சித் கடன்காரனிடமிருந்து தப்பித்தாரா?

அவரது வீட்டில் தங்கி இருந்த கொலைகாரன் யார்? என்பதுதான் இறுதி முயற்சி படத்தின் கதை.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ரஞ்சித்துக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வட்டி கட்ட முடியாமல் கடன்காரனிடம்  சிக்கித் தவிக்கும் காட்சிகளிலும்,  அதை மனைவியிடம் முழுமையாக சொல்ல முடியாமல் திணறும் காட்சிகளிலும் ரஞ்சித் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் மெகாலி மீனாட்சி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

சுனில் லாசர் இசையில் உருவான பாடல்கள் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்து நெஞ்சை வருடுகின்றன.

பாடலை இரண்டு இரண்டு வரிகளாக அவ்வப்போது காட்சிகளுக்கு ஏற்ப பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பது வெகு சிறப்பு.

கதையோடு பயணித்து காட்சிகளோடு ஒன்றச் செய்திருக்கிறது சூரியகாந்தியின் ஒளிப்பதிவு.

படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை தற்கொலை முயற்சிகளில் மட்டுமே ரஞ்சித் ஈடுபடுவது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

கந்து வட்டி கும்பலின் அடாவடித்தனத்திற்கு எதிராக சாட்டையை சுழற்றி இருக்கும் இயக்குனர் வெங்கட் ஜனா,  எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற மெசேஜையும் அழுத்தமாக இறுதி முயற்சி படத்தில் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.