Wednesday, May 13

எல்.ஐ.கே (LIK): விமர்சனம்

Loading

எல்.ஐ.கே (LIK): விமர்சனம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே), எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ‘பியூச்சரிஸ்டிக் ரொமாண்டிக் காமெடி’ திரைப்படம். 2040-ம் ஆண்டில் தொழில்நுட்பம் மனித உறவுகளை எப்படி ஆக்கிரமிக்கும் என்பதை கற்பனை கலந்து, அதே சமயம் ஜாலியான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் ஒரு கலர்ஃபுல் சினிமா இது.

2040-ம் ஆண்டு, அலைப்பேசி மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத ஒரு ‘பசுமை உலகத்தை’ உருவாக்கி, அங்குத் தனது மகன் வைப் வாசேவுடன் (பிரதீப் ரங்கநாதன்) வசிக்கிறார் தந்தை அன்புகடல் (சீமான்). செல்போன் மோகத்தில் இருந்து சமூகத்தை மீட்பதே இவர்களின் நோக்கம். ஆனால், வைப் வாசேவுக்கு சமூக வலைதளங்களில் புகழ்பெறத் துடிக்கும் தீமா (கீர்த்தி ஷெட்டி) மீது காதல் மலர்கிறது. இவர்களது காதலுக்கு வில்லனாக உருவெடுக்கிறது சூரியன் (எஸ்.ஜே.சூர்யா) கண்டுபிடித்த ‘எல்.ஐ.கே’ எனும் செயலி. மக்களின் டேட்டாக்களை வைத்து அவர்களின் காதலைத் தீர்மானிக்கும் இந்தச் செயலி, இவர்களின் உறவைச் சுக்குநூறாக்குகிறது. இதன் பிறகு, தனது காதலைக் காப்பாற்ற வைப் வாசே அந்தத் தொழில்நுட்பத்தை எப்படி எதிர்கொண்டார், சூரியனை எப்படிப் பழிவாங்கினார் என்பதே கதை.

 

காதல், காமெடி, ஆக்‌ஷன் எனத் தனக்குப் பழக்கப்பட்ட களத்தில், தனது ‘டிரேட்மார்க்’ டச் கொடுத்து மீண்டுமொரு சதம் அடித்திருக்கிறார், பிரதீப் ரங்கநாதன் . இவருடைய வசன உச்சரிப்பும், தனித்துவமான உடல்மொழியும் ‘ஹா ஹா’ ரகக் காட்சிகளை இன்னும் சத்தமாக்கியிருக்கிறது. குறிப்பாக, சமூக வலைதள வாசனையே தெரியாத ஒருவராக இருந்துவிட்டு, பின் ‘எல்.ஐ.கே’ செயலிக்கு முடிவு கட்ட அவர் தீட்டும் திட்டங்களும், அதற்கு அவர் கொடுக்கும் ‘பி.ஆர்’ (PR) ஜோன் ரெஃபரன்ஸ்களும் ரசிக்க வைக்கின்றன.

‘க்யூட்னெஸ்’ நிறைந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார், கீர்த்தி ஷெட்டி. சமூக வலைதளப் பக்கத்தில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையை உயர்த்துவதையே குறிக்கோளாகக் கொண்ட பெண்ணாக, இன்றைய காலத்து இளைய தலைமுறையைப் பிரதிபலிக்கிறார். பிரதீப்புடன் காதல் ‘ஆக்டிவேட்’ ஆகும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சீமான் (அன்புகடல்):
பசுமை உலகத்தின் நிம்மதி குலைந்துவிடாமல் காப்பவராக, பாசமும் லேசான கண்டிப்பும் கலந்த தந்தையாக நடித்துக் கைதட்டல் வாங்குகிறார். அலைப்பேசிக்கு அடிமையான சமூகத்தை மீட்கப் போராடும் ஒரு கொள்கை பிடிப்புக் கொண்ட மனிதராக இவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவருடைய மகளின் ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் சற்றே செயற்கையாகத் தெரிவது பலவீனம்.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் ‘எல்.ஐ.கே’ செயலியை உருவாக்கி, அதன் மூலம் காதலுக்கு ஒரு விதிமுறையை வகுக்க நினைக்கும் வில்லத்தனமான பாத்திரத்தில் ஆடி அசத்தியிருக்கிறார், எஸ்.ஜே.சூர்யா . தனது செயலியை நியாயமற்ற முறையிலும் காப்பாற்றத் துடிக்கும் காட்சிகளில் இவரின் நடிப்பு மிரட்டல். குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதும் ‘ஃபேஸ் ஆஃப்’ (Face-off) காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம்.

யோகி பாபுவின் ‘கெட்டப்’ காமெடிகள் ஆங்காங்கே கலகலப்பை உண்டாக்குகின்றன. இவர்களுடன் ஆனந்த்ராஜ் தனது ‘ஒன்-லைன்’ காமெடிகளால் ஸ்கோர் செய்கிறார். கௌரி கிஷன், ஷா ரா, மாளவிகா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர, அனிருத் பின்னணி குரல் கொடுத்திருக்கும் ‘ரோபோ’ கதாபாத்திரம் ஒரு சுவாரஸ்யமான புதுமை.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இப்படத்தின் மற்றொரு நாயகன் எனலாம். 2040-ம் ஆண்டின் சென்னையை, டிஜிட்டல் குடைகள் மற்றும் நவீனக் கட்டிடங்களுடன் ஒளி அமைப்பில் வர்ணஜாலமாகத் திரையில் காட்டியிருக்கிறார். எதிர்கால உலகைக் கண்முன் கொண்டுவந்ததில் இவரின் உழைப்பு அபாரம்.

அனிருத் இசை படத்தின் பலத்தை இரட்டிப்பாக்குகிறது. ‘அடாவடி’, ‘தீமா’ போன்ற பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆன நிலையில், ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல் திரையரங்கை ஒரு இசைத் திருவிழாவாகவே மாற்றுகிறது. சமூக வலைதள டிரெண்டிங் ஒலிகளைப் பின்னணி இசையில் லாவகமாகப் பயன்படுத்திப் படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் அனிருத்.

விக்னேஷ் சிவன் ஒரு புதுமையான களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல் பாதியில் கதை சற்று மந்தமாகச் சென்றாலும், இடைவேளைக்குப்பிறகு திரைக்கதையில் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் இன்ஸ்டால் செய்திருக்கிறார். தொழில்நுட்பம் ஒருபோதும் நிஜமான உணர்வுகளுக்கு ஈடாகாது என்ற கருத்தை வலியுறுத்திய விதம் சிறப்பு.

தொழில்நுட்பம் சூழ்ந்த டிஜிட்டல் உலகிலும், உண்மையான காதலும் நேர்மையான உணர்வுகளுமே வெல்லும் என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது இந்த ‘எல்.ஐ.கே’. குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய ஒரு நவீனக் கொண்டாட்டம்!