![]()
மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம்
இந்தியாவின் ரா உளவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியான சரத்குமார் நியூக்ளியர் அணு ஆயுதம் தயாரிக்க தேவையான மூலப்பொருள் அடங்கிய பெட்டியை எதிரிகள் கைக்கு கிடைக்க விடாமல் பாதுகாக்கிறார்.
ரஷ்ய ராணுவ அதிகாரிகள் திடீரென நுழைந்து அந்தப் பெட்டியை கைப்பற்றுவதுடன், சரத்குமாரையும் கைது செய்கின்றனர்.
சரத்குமாரை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு,
இந்த பெட்டியை பாகிஸ்தானுக்கு அனுப்பவும் திட்டம் தீட்டுகின்றனர்.
சரத்குமார் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டால் நமது ராணுவ ரகசியங்கள் அவர்களுக்கு தெரிந்து விடும் பேராபத்து இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக ரா பிரிவின் உயர் அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையில் ஒரு குழு களமிறங்குகிறது.
இதற்காக மஞ்சு வாரியர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்யாவின் உதவியை நாடுகிறார்.
அணு ஆயுதம் தயாரிக்கும் இந்த மூலக்கூறு அடங்கிய பெட்டி எதிரிகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டதா?
இதற்காக ஆர்யா மேற்கொண்ட முயற்சிகளையும், எதிர்கொண்ட இன்னல்களையும் விறுவிறுப்பான பாணியில் சொல்லும் ஸ்பை திரில்லர் படம்தான் மிஸ்டர் எக்ஸ்.
ஆங்கில படங்களுக்கு நிகராக நமது படங்கள் வருவதில்லை என்ற குறைபாட்டையும், இந்திப் படங்களைப் போல் ‘மல்டி ஸ்டாரர்’ படங்கள் தமிழில் வருவதில்லையே என்ற வருத்தத்தையும் ஒரு சேர போக்கியிருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ்.
படத்தின் துவக்க காட்சியே ஆங்கில படங்களுக்கு நிகராக அமர்க்களமாக படமாக்கப்பட்டிருப்பதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் தான்.
இவரது ஒளிப்பதிவு படத்தை இன்னொரு தளத்திற்கு உயர்த்தியிருக்கிறது என்றால் மிகையாகாது.
திபு நிணன் தாமஸின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
சரத்குமார், ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, அனகா ரைசா என்று பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களது நட்சத்திர இமேஜை மீறி பாத்திரங்களாகவே நமக்குத் தோன்றும் வகையில் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.
கட்டு மஸ்தான உடல் அமைப்பில் கவரும் ஆர்யா, ஸ்டைலிஷ் ஆன தோற்றத்திலும் உடல் மொழியிலும் கவனம் ஈர்க்கும் கௌதம் கார்த்திக், வித்தியாசமான வேடத்தை நிறைவாகச் செய்திருக்கும் மஞ்சு வாரியார் மற்றும் தன் அனுபவ நடிப்பால் காட்சிக்கு மெருகூட்டியிருக்கும் சரத்குமார் என்று ஸ்க்ரீன் ஸ்பேசை பகிர்ந்து கொண்ட அனைவருமே நம் நெஞ்சில் நிறைகிறார்கள்.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் மிஸ்டர் எக்ஸ் அனைவரையும் கவரும்.


