![]()
ரூம்பாய்: விமர்சனம்
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரியில் பயின்ற ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம், ‘ரூம்பாய்’.
த்ரில்லராக துவங்கி ஃபேமிலி சென்டிமெண்ட்டோடு முடியும் டபுள் ஜானர் கதை.
ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார்.
ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது கதை.
சி.நிகில் (அறிமுக) ஹீரோ. பாசம், கோபம், காமெடி என எல்லாவற்றுக்கும் வாய்ப்புள்ள கதாபாத்திரம். முடிந்த அளவு செய்திருக்கிறார்.
அரண்மனை 4 ஹர்ஷாதான் நாயகி. கொஞ்ச நேரமே வந்தாலும், இயல்பாக நடித்து கவர்கிறார். காதலை கண்களிலேயே சொல்லிவிடுகிறார். அந்த லிப்ட் காட்சி, காதல் முத்திரை.
நாயகின் தந்தையாக வரும் பிர்லா போஸ், அம்மாவாக வரும் கவிதா விஜயன், சாதனா, கற்பகம் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஓட்டல் அதிபராக வரும் இமான் அண்ணாச்சி சில காட்சிகளிலேயே காணாமல் போய்விடுகிறார். ஹீரோவின் நண்பராக வரும் காத்து கருப்பு சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி, கவர்ச்சி விருந்து படைத்து இருக்கிறார்.
நிகில் மற்றும் வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். அதே நேரம் பின்னணி இசையில் ரசிக்கவைத்து இருக்கிறார்கள்.
திகில் காட்சிகளா இருக்கட்டும், சென்டிமெண்ட் காட்சிகள், காதல் காட்சிகளாக இருக்கட்டும்… அதற்கேற்ற இசையை அளித்து ரசிக்க வைத்து இருக்கிறார்கள்.
மலைகள், இருள் அறைகள் என பல இடங்களிலும் புகுந்து விளையாடி ஒரு த்ரில்லர் கதைக்கு ஏற்ற பாரதி ராஜன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
முதல் படத்திலேயே யூகிக்க முடியாத கதையைச் சொல்லி ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.
த்ரில்லர், ஃபேமிலி சென்டிமெண்ட் என இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து வைத்து இருக்கிறார்.


