ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம்
யோகி பாபுவின் தந்தை புகழ்பெற்ற மேஜிக் நிபுணர்.
தன் தந்தையைப் போலவே தானும் மேஜிக் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற நினைக்கிறார் யோகி பாபு.
ஒரு முறை பார்வையாளர்களாக வந்த ஒரு சிறுமியை வைத்து மேஜிக் செய்யும்போது ஏற்பட்ட தவறால் சிறுமி பலத்த காயம் அடைகிறாள்.
மேஜிக் பார்க்க வந்தவர்கள் யோகி பாபுவுக்கு தர்ம அடி கொடுப்பதுடன் போலீசிலும் ஒப்படைக்க, அவர்களும் தங்கள் பங்குக்கு தர்ம அடி கொடுக்கிறார்கள்.
யோகி பாபு வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் அவருக்கு தேவையில்லாமல் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருவதையே தொழிலாக வைத்திருக்கின்றனர்.
இந்த இளைஞர்களில் ஒருவன் யோகி பாபுவின் கையை வெட்டுவதற்கு அமெச்சூர் ரவுடிகள் இருவரை ஏற்பாடு செய்கிறான். அவனும் யோகி பாபுவை கையை வெட்டுகிறான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் யோகி பாபு திடீரென்று காணாமல் போகிறார்.
கையை வெட்ட சொன்ன இளைஞனும் கல்லறைப் பகுதியில் பிணமாக கிடக்கிறான்.
தொடர்ந்து மேலும் சில கொலைகள் நடக்கின்றன.
இந்தக் கொலைகளை செய்வது யார்?
காணாமல் போன யோகி பாபு என்ன ஆனார் என்பதுதான் ஜோரா கை தட்டுங்கள்.
கதையின் நாயகன் வேடம் என்பதால் யோகி பாபு தன் வழக்கமான காமெடியை மூட்டை கட்டி வைத்து விட்டாரோ என்னவோ?
மற்றபடி குணச்சித்திர வேடத்தில் நம் பரிதாபத்தை பெறும் வகையில் நிறைவாகவே நடித்திருக்கிறார் யோகி பாபு.
கதையின் நாயகனுக்கே பெரிதாக வேலை இல்லை என்ற நிலையில் அவரது பெண் தோழி வேடத்தில் வரும் சாந்தி ராவுக்கு என்ன பெரிதாக வேலை இருந்து விடப் போகிறது?
போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் பெராடி, யோகி பாபுவின் உதவியாளராக வரும் கல்கி, மூன்று இளைஞர்களில் ஒருவராக வரும் அருவிபாலா ஆகியோர் மட்டும் கவனம் ஈர்க்கின்றனர்.
அஞ்சலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தேசிய விருதுகளை வென்றவருமான மது அம்பாட் ஒளிப்பதிவு செய்த படமா இது? ஆம் படத்தின் டைட்டில் கார்டு அப்படித்தான் சொல்கிறது.
படத்தை இயக்கி இருப்பவர்கள் வினிஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ் கே.
மேஜிக் கலைஞன் ஒருவனது கதை என்பதை வைத்து எவ்வளவோ சிறப்பாக படத்தை உருவாக்கி இருக்க முடியும்.
ஆனால் என்ன காரணத்தாலோ இயக்குனர்கள் தவறி விட்டார்கள்.
ஜோரா கைய தட்டுங்க என்ற டைட்டில் மட்டும் இருந்தால் போதுமா?
படத்தை பார்த்து சில காட்சிகளிலாவது ஜோரா கை தட்ட வேண்டாமா டைரக்டர் சார்?