Monday, April 20

காயல்_ விமர்சனம்

Loading

காயல்_ விமர்சனம்

தயாரிப்பு –

ஜெ ஸ்டுடியோ,
ஜேசு சுந்தரமாறன் .
இசையமைப்பாளர் ஜஸ்டின்,
எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக்,

நடிகர்கள்,
அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக்,
ஸ்வாகதா, ஐசக்,

எழுத்து இயக்கம்,
தமயந்தி

தன் வலிமையான எழுத்துக்களால் புகழ் பெற்ற தமயந்தி,  இயக்குனர் பொறுப்பை ஏற்று காதலர்களின் வலியை சொல்லும் திரைப்படம் காயல்.

ஐசக் வர்கீஸ், அனுமோள் தம்பதியின் செல்ல மகள் காயத்ரி, வேறு ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை காதலிக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஐசக், தன் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாலும், தாயார் அனுமோள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்.

எனவே தங்கள் இனத்திலேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

ஆனால் எதிர்பாராமல் காயத்ரி தற்கொலை செய்து கொள்கிறார்.

மகளின் மனம் விரும்பிய மணவாழ்க்கைக்கு அனுமதிக்காமல், மரணத்துக்கு காரணமாகிவிட்ட மனைவி மீது கடும் கோபம் கொண்ட ஐசக் மனைவியுடன் பேசுவதை தவிர்த்து,  அவரை விட்டு விலக நினைக்கிறார்.

மகளின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் செல்லும் போது, எதிர்பாராமல் மகள் காதலித்த இளைஞனை அவர்கள் சந்திக்க நேர்கிறது.

இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் காயல்.

கதையில் பெரிதாக புதுமையான அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும்,  நிஜத்துக்கு நெருக்கமாக நின்று படத்தை இயக்கி இருக்கிறார் தமயந்தி.

“செத்துப் போவதும் காணாமல் போவதும் ஒன்றுதான்… அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் எதுவும் இல்லை….” என்பது போன்ற கூர்மையான வசனங்கள் படம் முழுவதும் விரவி இருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் கார்த்திக்கின் ஒளிப்பதிவுதான். கடலோர காட்சிகளை கவிதையாக படைத்து பார்வையாளர்களின் மனதை குளிர்வித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக்.

ஜஸ்டின் இசையில் உருவான பாடல்கள் மனதை வருடுகின்றன.

மகள் காயத்ரி இருமுவதைக் கண்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்த கையோடு “யாரை வந்து எங்கே பார்க்க வேண்டும்…” என்று கேட்பது ரசமான காட்சி.

காதலையும் மறக்க முடியாமல், அம்மாவின் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறும் வேடத்தில் காயத்ரி திறம்பட நடித்திருக்கிறார்.

ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு யதார்த்தமான நடிப்பின் மூலம் வலு சேர்த்திருக்கிறார் லிங்கேஷ்.

படம் முழுவதும் வரும் பலமான வேடம் ஏற்றிருக்கும் ரமேஷ் திலக் தன் வழக்கமான முத்திரையுடன் அதை முழுமையாக்கி இருக்கிறார்.

‘காயல்’ அனைவரையும் கவரும்.

மதிப்பெண் 3.5/5