![]()

கல்கி — விமர்சனம்
இந்திய திரையுலக வரலாற்றில் பிரம்மாண்டமான புராண + சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாகி இருக்கிறது, கல்கி.
மகாபாரதப் போர் நடக்கிறது. கெளரவர்கள் சார்பாக போரிடும், அஸ்வத்தாமன், பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை தாயின் வயிற்றிலேயே கொல்கிறார். இதனால் ஆத்திரமான கிருஷ்ண பகவான், அஸ்வத்தாமாவுக்கு சாகாவரத்தை சாபமாக அளிக்கிறார். மேலும், “கலியுகத்தில் நான் மீண்டும் அவதாரம் எடுப்பேன். அப்போது நீ என்னை காப்பாற்றினால் மட்டுமே தனது இந்த சாபத்தில் இருந்து மீள்வாய்” என பாப விமோசனம் சொல்கிறார்.
பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது கி.பி. 2898ம் வருடம்.
பெரும் அழிவுக்குப் பிறகு, உலகத்தின் கடைசி நகரமாக மிச்சம் இருக்கிறது, காசி. அந்நகரை சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன் ) என்கிற கொடுங்கோலன் அரசாள்கிறான். தான் மட்டும் வசதியாக வாழ்ந்து, மக்களை வறுமையில் சிக்க வைத்து இருக்கிறான்.
தானும் வசதியான வாழ்க்கை வாழ போராடுகிறான் பைரவா (பிரபாஸ்).
சர்வாதிகாரி சுப்ரீம் யாஸ்கினின் அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. அதுதான் கல்கி. கடவுள் கிருஷ்ணன். கல்கியை கருவில் சுமப்பவள், சுமதி (தீபிகா படுகோன்).
இந்தக் குழந்தையை கருவிலேயே அழிக்க, சர்வாதிகாரி யாஸ்கின் துடிக்கிறார். அதே குழந்தையைக் காப்பாற்றி தனது சாப விமோசனம் பெற போராடுகிறார் அஸ்வத்தாமன்.
இன்னொரு பக்கம், அந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் மூலம் தனது வசதியான வாழ்க்கை என்கிற கனவை சாதிக்க நினைக்கிறார் பைரவா.
அஸ்வத்தமா சாபத்தில் இருந்து மீண்டாரா, பைரவா ஆசை நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.
நாயகன் பிரபாஸ், அதிரடி சண்டைக் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். அதே நேரம் நகைச்சுவை என அவர் செய்யும் சேஷ்டைகள் நம்மை அவ்வளவாக கவரவில்லை.
நடிப்பில் மிரட்டுவது அமிதாப்தான். முதிர்ந்தவயதில், அவரது கம்பீர நடை அசத்துகிறது. சண்டைக் காட்சிகளிலும் மிரட்டுகிறார் மனிதர்.
கமல், இரண்டு காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஆனாலும் அவரது பார்வையும், குரலும் அதிரவைக்கின்றன.
தீபிகா படுகொன், ஷோபனா, பசுபதி, அனா பென் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது.
ஒளிப்பதிவு, கிராபிக் காட்சிகள் அசத்துகின்றன. பின்னணி இசையும் சிறப்பு.
புராண கதையை சைன்ஸ் ஃபிக்ஷனோடு கலந்து அளித்து இருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். ஒரு பக்கம் அதிநவீனமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் கதாபாத்திரங்கள், இன்னொரு பக்கம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகளை கொண்ட கதாபாத்திரங்கள் என அறிவியலையும் கற்பனையையும் சரிவிகிதத்தில் கலந்து அளித்து இருக்கிறார்.
பிரபாஸ் ஓட்டும் வாகனம் பேசுகிறது.. குரல் கொடுத்து இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பட ஆரம்பத்தில் வரும் குருக்ஷேத்திர போர் காட்சிகள் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை வேறொரு உலகத்தை காண்பித்து இருக்கிறார்கள்.
புதுமையான திரை அனுபவத்தை பெற நினைக்கும் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய படம் கல்கி.

