104 total views, 1 views today

கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டிய ‘சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்திருக்கும் படம்தான் காரி.
சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராஜ் கிரண், ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், ஜே டி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
மலையாளப் படங்களில் நடித்து வரும் பார்வதி அருண் கதாயாகி வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கிடையே பொதுவாக உள்ள கோவிலை யார் நிர்வகிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டு ஊர்காரர்களும் ஜல்லிக் கட்டு போட்டியை நடத்தி வெற்றி பெறும் அணியைச் சேர்ந்த ஊருக்கு கோவில் நிர்வாகத்தை ஒப்படைப்பது என முடிவு செய்கின்றனர்.
ஒரு ஊர்க்காரர்கள் வளர்த்தும் பதினெட்டு வகையான ஜல்லிக்கட்டு மாடுகளில் பத்து மாடுகளுக்குக் குறையாமல் மற்ற ஊர்க்காரர்கள் பிடித்துவிட்டால் மாடு பிடிவீரர்கள் இருக்கும் ஊர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஆனால் மாடு பிடிக்க வேண்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடுகளம் நரேனும் அவர் மகன் சசிகுமாரும் சென்னையில் இருப்பதால் அவர்களை அழைத்து வர நாகிநீடு சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் ஆடுகளம் நரேன் பந்தக்குதிரைகளை பராமரிப்பவராகவும், சசிகுமார் பந்தயக் குதிரையை ஓட்டும் ஜாக்கியாகவும் பணியாற்றுகின்றனர். மிருகங்களிடம் மிகப் பிரியமாக இருக்கும் ஆடுகளம் நரேன், ரேஸில் தோற்ற குதிரையை முதலாளி கொன்று விடவே மனம் உடைந்து மரணத்தைத் தழுவுகிறார்.
இந்த சூழலில் சென்னை வந்து சசிகுமாரை நாகிநீடு கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். பெரும் பணக்காரரான ஜே.டி.சக்ரவர்த்தி ஜல்லிக்கட்டு காளைகளை விலைக்கு வாங்கி அவற்றின் விந்தணுக்களை சேகரித்து அயல்நாடுகளுக்கு விற்பதுடன் அந்த மாட்டையும் கொன்று அதன் மாமிசத்தை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்.
நாயகி பார்வதி அருண் ஆசையுடன் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை அவரது தந்தை பாலாஜி சக்திவேல் கேரள மாட்டுத் தரகரிடம் வற்றுவிட அந்தக் காளை ஜே.டி.சக்ரவர்த்தியிடம் வந்து சேர்கிறது.
அப்பா மாட்டை விற்றுவிட்டதை அறிந்த மகள் அலறித் துடிக்க, வாயில்லா ஜீவனிடமும் ப்ரியமுடன் இருக்கும் தன் தந்தையைப்போலவே பார்வதியும் இருப்பதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்து மாட்டை மீட்கப் புறப்படுகிறார் சசிகுமார்.
“ஜல்லிக்கட்டு போட்டியில் அந்த மாட்டை நீ அடக்கி விட்டால் நான் மாட்டை உனக்கு விட்டுக் கொடுத்து விடுகிறேன்…அப்படி அடக்க முடியாவிட்டால் அந்த மாடு எனக்குத்தான்” என சொல்கிறார் சக்ரவர்த்தி. சசிகுமார்
ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று மாட்டைக் காப்பாற்றினாரா…. ஊர் மக்கள் மாடு பிடி போட்டியில் வென்றார்களா என்பதுதான் காரி.
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை அடிநாதமாக வைத்து கதையை உருவாக்கியதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு நடக்க கருவேல முள்களை அகற்றி, ஆற்றை தூர் வாரும் வேலைகளை அந்த ஊர் மக்களைக் கொண்டே செய்ய வைத்திருப்பதுபோல் காட்சிகளை அமைத்த ஹேமந்த் குமாருக்கு தனியாக ஒரு பாராட்டை சொல்ல வேண்டும்.
நாயகி பார்வதி அருண் அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கவும் செய்கிறார். கண்டிப்பாக தொடர்ந்து தமிழ்ப்படங்களில் ஒரு ரவுண்ட் வருவார் எனத் தோன்றுகிறது.
பாலாஜி சக்திவேல் தான் ஒரு நல்ல இயக்குநர் மட்டுமல்ல.. நல்ல நடிகரும்கூட என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.
யாரோ சொன்னார்கள் என்பதற்காக மகள் ஆசையைக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை மகளுக்கே தெரியாமல் விற்கப் போவதே உறுத்தல் என்றால், மாட்டை வாங்கும் தரகனிடம் என் மாடு கறி நிறையா இருக்கும் என்று அழுதுகொண்டே சொல்வதெல்லாம் சாரி….கொஞ்சம் ஓவர்.
டி.இமான் இசையில் உருவான “சாஞ்சுக்கவா…” பாடல் நெஞ்சில் நிறைகிறது.
கணேஷ் சந்திராவின் ஒளி்ப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது.
‘காரி’ அனைவரையும் கவர்வான் என்பதில் ஐயமில்லை. மதிப்பெண் 3.5 5