Friday, October 23

காட்டேரி – விமர்சனம்

Loading

காட்டேரி – விமர்சனம்

டி.கே இயக்கி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘யாமிருக்க பயமே’ திரைப்படம்தான் பேய் படங்களை நகைச்சுவையாக சொல்வதில் முன்னோடி என்று சொல்லலாம். ட்ரெண்ட் செட்டராக விளங்கிய படத்தைத் தந்த டி.கே. இயக்கிய காட்டேரி படம் என்பதால் எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

திருமணம் முடிந்த கையோடு பெரும் புதையலைத் தேடி வைபவ், சோனம் பாஜ்வா தம்பதியினர் நண்பர்களுடன் ஒரு கிராமத்துக்கு வருகின்றனர்.

அந்த கிராமமே மிகப் பெரிய சுடுகாடுபோல் காட்சியளிக்கிறது. கிராமத்தில் இருந்த அனைவரும் ஒட்டு மொத்தமாக மரணமடைந்து ஆவிகளாக சுற்றித் திரிகின்றனர்.

புதையல் எடுக்க வந்தவர்களுக்கோ கிராமத்தைவிட்டு வெளியேறும் வழி தெரியவில்லை.
அவர்கள் உயிர் பிழைத்தார்களா…. புதையல் கிடைத்ததா……கிராம மக்கள் அனைவரும் இறந்தது எப்படி என்பதை எல்லாம் திகில் கலந்து சொல்ல வேண்டிய கதை ஏனோ தானோவென்று திரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

சில படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் காட்டேரியில் பல இடங்களில் ஆபாச வசனங்கள்தான். இந்த வசனங்கள் படத்தையே அர்த்தமற்றதாக்குகிறது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படமே பரவாயில்லை என்று சொல்லத் தக்க வகையில் சில காட்சிகளில் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

வரலட்சும், ஜான் விஜய், கருணாகரன், மைம் கோபி, ரவி மரியா என ஏகப்பட்ட துணை பாத்திரங்கள் இருந்தும் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை.

படத்தின் ஒரே ஆறுதல் விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவுதான். பெரும்பகுதி காட்சிகள் இரவில் நடந்தாலும் அவற்றை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். ஆயினும் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டதே…

எஸ்.என்.பிரசாத்தின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

கதையிலும் காட்சியமைப்பிலும் மெனக்கெட்டு உருவாக்கியிருந்தால் இந்தக் காட்டேரி அனைவரையும் கவர்ந்திருக்கும்.