Thursday, September 24

கிங்ஸ்டன் _ விமர்சனம்

Loading

கிங்ஸ்டன் _ விமர்சனம்

ஜிவி பிரகாஷின் 25 ஆவது படமாக மலர்ந்திருக்கிறது கிங்ஸ்டன்.

படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்று படத்தையும் தயாரித்து இருக்கிறார் ஜீவி.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

ஆனால் சிறிது காலமாக அவர்களால் கடலுக்குச் சென்று மீன் பிடி தொழிலை செய்ய முடியவில்லை. காரணம் கடலுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பிரேதத்தின் ஆத்மா கடல் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு மீன் பிடிக்க வரும் மீனவர்களை கொன்று விடுவதாக மீனவ மக்களே நம்புகிறார்கள்.

இந்த துஷ்ட ஆவியின் அட்டகாசங்கள் சுமார் 40 ஆண்டுகளாக நீடிக்கின்றன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த இளைஞர்கள் கடல் அட்டையை கடத்தும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

கிங்ஸ்டன் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், கிங் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜிவி பிரகாஷ் தனது நண்பர்களுடன் எல்லை கடந்து சென்று கடல் அட்டைகளை கைமாற்றி விடுகிறார்.

உத்தமன் போல் வேஷம் தரித்து ஊர் மக்களுக்கெல்லாம் நல்லது செய்து வரும் தாமஸ் என்பவன்தான் இந்த கடத்தலின் பின்னணியில் இருக்கிறான்.

கடல் அட்டை கடத்தல் என்ற பின்னணியில் போதை பொருளை தாமஸ் கடத்துவதும், அதற்கு தானும் தன் நண்பர்களும் தங்களை அறியாமல் உடந்தையாக இருப்பதும் ஜிவி பிரகாஷுக்கு தெரிய வருகிறது.

தாமஸின் முகமூடியை கிழித்தெறிவதுடன்,   கடலுக்குள் இருக்கும் அமானுஷ்யம் குறித்தும் உண்மை அறிய தனது நண்பர்களுடன் புறப்படுகிறார் ஜி.வி பிரகாஷ்.

உண்மையில் கடலில் இருக்கும் அமானுஷ்யம் என்ன? ஜிவி பிரகாஷ் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் படத்தின் பிற்பகுதியில் சுவைபட விவரிக்கப்படுகிறது. பெருமளவில் கடலிலும் கடல் சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட்டு இருக்கும் கிங்ஸ்டன் படத்துக்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் என்றால் மிகையாகாது.

கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் அண்டர் வாட்டர் ஷாட்ஸ் அனைத்தும் ஆங்கில படங்களுக்கு நிகரான தரத்துடன் அருமையாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. அழகம்பெருமாள், சேத்தன்,  குமாரவேல் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் தங்கள் பாத்திரப்டைப்பை உணர்ந்து சிறப்பாக  நடித்திருக்கின்றனர்

கதாநாயகியாக வரும் திவ்யா பாரதி பாத்திரப்படைப்பு எந்த விதத்திலும் கதை அம்சத்தோடு ஒட்டிப் போகவில்லை. அதுவும் அமானுஷ்ய புதிரை விடுவிக்க தன் நண்பர்களுடன் ஜிவி பிரகாஷ் கடலுக்குள் செல்லும்போது அவரும் அந்தப் படகில் ஒளிந்திருந்து செல்வது அபத்தமான காட்சி.

கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தி மற்றும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் ஆகியோரின் பங்களிப்பும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

ஜிவி பிரகாஷின் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை கவனத்தை ஈர்க்கிறது.

நல்ல கதைக்களம் என்றாலும் சரியான முறையில் பின் திரைக்கதை அமைக்காதது தான் படத்தின் குறை என்று சொல்ல வேண்டும்.

ஆயினும் தாராளமாக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

மதிப்பெண்3/5