கூகுள் குட்டப்பா – திரைப்பட விமர்சனம்

0

 245 total views,  1 views today

கூகுள் குட்டப்பா – திரைப்பட விமர்சனம்

கிராமத்தில் வசிக்கும் கே.எஸ்.ரவிகுமார் மனைவியை இழந்தவர். ஜெர்மனியில் வேலை பார்க்கும் அவரது மகன் தர்ஷன் தன் தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உருவான ரோபோ ஒன்றை அனுப்பி வைக்கிறார். ஆரம்பத்தில் அதனிடம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத ரவிகுமார், நாளடைவில் அதனிடம் உணர்வுபூர்வமாக ஒன்றி விடுகிறார்.

சின்னப் பையன்போல் இருக்கும் ரோபோவுக்கு குட்டப்பன் என்று பெயர் சூட்டி, வேட்டி சட்டை போட்டு அலங்காரம் செய்து அழகு பார்ப்பதுடன் கோவிலுக்குகூட அழைத்துச் செல்கிறார். சமூக வலைதளம் மூலம் தன் இளம் வயது தோழியுடன் ரவிகுமார் சேட் செய்யக்கூட இந்த குட்டப்பன் துணை  நிற்கிறான்.

இந்த ரோபாவால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்பது அதைத் தயாரித்த நிறுவனத்துக்கு தெரிய வருகிறது. எனவே ரோபோவை திரும்பப் பெறவும், அதனிடமிருந்து அப்பாவைக் காப்பாற்றவும் இந்தியா வருகிறார் தர்ஷன். அப்பாவை தர்ஷன் காப்பாற்றினாரா….ரோபோவுக்கு என்ன ஆனது என்பதுதான் இறுதிப்பகுதி.

படத்தைத் தயாரித்து பிரதான வேடத்தில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிகுமார்தான் ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார்.

பாசம், கோபம், ஆதங்கம், என பல்வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய அருமையான வேடம் ரவிகுமாருக்கு. சும்மா சொல்லக்கூடாது….கிடைத்த வாய்ப்பில் எல்லாம் பவுண்டரியாகவும், சிக்ஸராகவும் விளாசுகிறார் மனிதர். கால்களை விந்தி விந்தி நடக்கும் கே.எஸ்.ரவிகுமார் நீண்ட நாட்களாக மனிதில் நிற்பார்.

யோகி பாபு படத்தில் இருந்தாலும் நகைச்சுவைதான் இல்லை. தர்ஷன், லோஸ்லியா என யாருக்குமே பெரிதாக வாய்ப்பில்லை. கே.எஸ்.ரவிகுமார் சேட் செய்யும் பெண்ணாக வருபவர் நினைவில் நிற்கிறார்.

ஜிப்ரனின் இசையும், அர்வியின் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.

ரோபோ வரும் காட்சிகள் குழந்தைகளைக் கவரும். அறிமுக இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் படத்தை இயக்கியிருக்கிறார்கள். துவக்கத்திலிருந்து இறுதிவரை படத்தை தொய்வின்றி கொண்டு சென்றிருக்கிறார்கள்.

வழக்கமான கதைகளையே திரைப்படங்களில் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு கூகுள் குட்டப்பனை ஒரு முறை தாராளமாக பார்த்து ரசிக்கலாம்.

மதிப்பெண் 5/ 3

Share.

Comments are closed.