![]()

கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் நடுத்தர குடும்பம்.
திருமணத்தை மீறிய உறவு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார் குடும்பத்தலைவி. இதனால் வெறுப்படைந்த குடும்பத்தலைவர், இரண்டு பிள்ளைகளையும் நிர்க்கதியாக விடுகிறார்.
அந்த பிள்ளைகள்… பதினோரு வயது சிறுவன், எட்டு வயது சிறுமி… இருவரும் தூரத்து சொந்தமான பெரியப்பாவிடம் அடைக்கலமாகிறார்கள்.
பெரியப்பாவின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து, தங்கையை கல்லூரிவரை படிக்கவைக்கிறான் அண்ணன்.
பிரிந்து சென்ற தாய், தந்தையை ஒரு நாள் சந்திக்கறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
தென் மேற்கு பருவகாற்று படத்தில் விஜய் சேதுபதியை அடையாளம் காட்டியதுபோல இந்த படத்தில் ஏகனை அடையாளம் காட்டி இருக்கிறார் சீனு ராமசாமி. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு. வாழ்த்துகள்.
ஜெயசுதா, பிரிகிடா சகா இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாயகனுடன் பணியாற்றுபவராக வரும் குட்டிப்புலி தினேஷ் பேசும் வசனங்கள் கலகலப்பூட்டுகின்றன.
ரகுநந்தனின் பின்னணி இசை கதையின் உணர்வுக்கு வலுசேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ், தேனி மலைப்பகுதிகளின் குளிரையும் வராக நதியின் சில்லிப்பையும் உணரச் செய்திருக்கிறார்.
திருநங்கைகள் மீதான மதிப்பு உயரும் வகையில் காட்சிகள் அமைத்திருப்பதும் சிறப்பு. உறவுகள் மீதான அன்பை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படம்.

