லப்பர் பந்து: விமர்சனம்
இன்னும் ஒரு கிரிக்கெட் படமா என்று ஆரம்பத்தில் சற்று அயற்சி தோன்றினாலும் இது முற்றிலும் மாறுபட்ட ரசிக்கத் தகுந்த கிரிக்கெட் படமாக மலர்ந்திருக்கிறது.
ஜாலி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் குழுவின் தலைவன் காளி வெங்கட். தனது ஊரில் உள்ள இந்த கிரிக்கெட் குழுவில் விளையாட வேண்டும் என்பது சிறு வயது முதலே ஹரிஷ் கல்யாண் ஆசை.
ஹரிஷ் கல்யாண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி அவரது கிரிக்கெட் ஆசையில் மண்ணை போடுகிறார் வைஸ் கேப்டன்.
இதேபோல் மற்றொரு ஊரில் உள்ள கிரிக்கெட் குழுவில் விளையாடும் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கைக்குட்டையை சுருட்டி பேட்டின் கைப்பிடியை சுற்றி கெத்து காட்டுவதில் துவங்கி, மட்டையை சுழற்றி பந்தை அடிப்பது வரை கெத்து காட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி.
கெத்துவின் மனைவிக்கோ கணவன் கிரிக்கெட் விளையாட செல்வது பிடிக்காது. ஆயினும் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு கிரிக்கெட் விளையாடச் செல்வதுதான் கெத்துவின் வழக்கம். கெத்தின் மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் ஹரிஷ் கல்யாணம் காதலிக்கின்றனர் அட்டக்கத்தி தினேஷுக்கும் ஹரிஷ் கல்யாணத்துக்கும் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு உரசல் பெரிதாக வளர்ந்து பகையாகவே மாறுகிறது தனக்கு மருமகனாக வரப்போகிறவர் தனது எதிரியான ஹரிஷ் கல்யாண் என்பது கடைசி நேரத்தில் தினேஷுக்கு தெரிய வருகிறது. இதனால் திருமணம் தடைபெறுகிறது. காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் தெறிக்கவிட்டிருக்கிறார்கள்.
சென்னை 28, கனா, ஜீவா, இந்தியில் கூமர், 83, ஜெர்சி என கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்று உள்ளன. அந்த வகையில் வந்திருந்திருக்கிறது லப்பர் பந்து.
கிரிக்கெட், அடிதடி மோதல், செண்டிமெண்ட், காதல் என சமமாய் கலந்து ரசிக்க வைத்து இருக்கிறார்கள்.
பொதுவாக திரைப்படத்தில் ஒருவர் அல்லது ஓரிருவர் சிறப்பா நடித்தால் அவரைப் பாராட்டலாம். அனைவருமே சிறப்பாக நடித்து இருந்தால்.. நடிக்க வைத்த இயக்குநரையும் பாராட்ட வேண்டும் அல்லவா.. அப்படிப்பட்ட இயக்குநர் அமைந்து இருக்கிறார் இந்த படத்தில்.
வாழ்த்துகள்.
அதிலும் அட்ட கத்தி தினேஸ் அசத்தல்.
கிரிக்கெட் களத்தில் அனாயசமாக அடித்து வெற்றி பெறுவது, மனைவியைக் கண்டதும் பயத்தில் பம்முவது, காதலை நளினமாக வெளிக்காட்டுவது, மகள்மீது பாசத்தைக் காட்டுவது என வேறு பரிமாணம் காட்டியிருக்கிறார். தன்னை விட்டுப் போன மனைவி திரும்பி வந்ததை அவர் உணர்ந்து உடைந்து அழும் காட்சி ஒன்று சாட்சி. அவர் மனைவியாக வரும் ஸ்வாஸ்விகா நல்ல தேர்வு. பார்வையாலேயே மிரட்டுகிறார்.
அன்பு கதாபாத்திரத்தில் வரும் ஹரீஸ், இவர்கள் நண்பர்களாக வரும் பால சரவணன், ஜென்சன் பிரபாகர், அம்மாக்களாக வரும் கீதா கைலாசம், தேவதர்ஷினி போன்ற அனைவருமே அற்புதமாக நடித்து உள்ளனர்.
வசனங்கள் இயல்பாக அதே நேரம் நகைச்சுவையுடன் உள்ளன. தவிர, ஆழ்ந்த கருத்துக்களையும் கொண்டு இருக்கின்றன. வெளிப்படையாக.. பிரச்சாரமாக சாதி எதிர்ப்பைச் சொல்லாம் கதையோட்டத்துடன் சொன்னது சிறப்பு.
ஒளிப்பதிவும், இசையும் படத்துக்கு பலம்.
நல்ல கருத்துக்களை, கதையோட்டத்துடன் சொல்லி ரசிக்க வைத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பாராட்டுகள்.