![]()

குரங்கு பெடல் விமர்சனம்
குழந்தைகள் படம் என்ற பெயரில் வரும் அபத்த களஞ்சிய படங்களுக்கு மத்தியில் நெஞ்சை தொடும் விதத்தில் வந்திருக்கும் நிஜமான குழந்தைகள் படம் குரங்கு பெடல்.
சிறுவயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட அனுபவம் பலருக்கும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கும். அத்தகைய அழகான அனுபவங்களை வைத்து, ரசிக்கத்தக்க காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட படம்தான் குரங்கு பெடல்.
கிராமத்தில் நெசவு வேலை செய்யும் காளி வெங்கட் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளாததாலேயே பல இடங்களுக்கு நடந்தே செல்கிறார். இதனால் அவரை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். அவரது மகன் சந்தோஷ் வேல்முருகன் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட பழகுகிறார்.
சொந்தமாக ஒரு புதிய சைக்கிளை கொண்டு வரும் நண்பனுடன் மற்ற நண்பர்கள் சென்றுவிட, தனியாகவே வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்து குரங்கு பெடல் போட்டு பழகுகிறான் சந்தோஷ்.
சைக்கிளுக்கு வாடகை தர முடியாமல் வீட்டில் இருக்கும் உண்டியலில் கை வைக்கிறான். பின்னர் அதுவும் போதாமல் சூதாடி கையில் உள்ள காசையும் இழக்கிறான். சைக்கிள் வாடகைக்காக அக்காவிடம் பணம் கேட்க அருகாமையில் இருக்கும் ஊருக்கே சென்று விடுகிறான்.
சைக்கிளையும் சந்தோஷையும் எல்லோரும் பரபரப்புடன் தேடுகிறார்கள்.
மாயமான சிறுவன் மீண்டும் வந்தானா? அவனது சைக்கிள் கற்றுக் கொள்ளும் ஆசை நிறைவேறியதா என்பது படத்தின் இறுதி பகுதி.
சொந்த சைக்கிள் இல்லாததால் ஏற்படும் பொருள் நஷ்டத்தையும், லாட்டரி டிக்கெட் வாங்கிய காசில் சொந்த சைக்கிளையே வாங்கி இருக்கலாம் என்று அப்பாவுக்கு மகன் இயல்பாக புரிய வைப்பதும் கவித்துவமான காட்சிகள்.
சந்தோஷ் வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்களாக வரும் அனைத்து சிறுவர்களும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
சைக்கிள் கடைக்காரராக வரும் பிரசன்னா பாலச்சந்தரனும், குடிகாரனாக வரும் ஜென்ஷன் திவாகரும் அட்டகாசமான காமெடியில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
குழந்தைகள் திரைப்பட வளர்ச்சி கழகம் என்ற பெயரில் மத்திய அரசின் ஆதரவுடன் ஒரு அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெயருக்குத்தான் இந்த அமைப்பு இயங்குகிறதே தவிர, குறிப்பிட்டுச் சொல்லும் படியான செயல்கள் எதையும் இது செய்ததாக தெரியவில்லை.
குரங்கு பெடல் திரைப்படத்தை குழந்தைகள் திரைப்பட கழகம் வாங்கி, இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து, அனைத்து மாநில சிறுவர்களும் பெரியவர்களும் இப்படத்தை பார்க்கும்படி செய்ய வேண்டும்.
மதிப்பெண் 4.5/5

