![]()
குற்றம் புதிது _ விமர்சனம்
போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனன் மகள் பிரீத்தி பணியை முடித்துவிட்டு இரவு வெகு தாமதமாக தன் வீட்டுக்கு புறப்படுகிறாள்.
தன் வண்டி பிரச்சனையாகி விட்டதால் ஆட்டோவில் வர இருப்பதாக தந்தைக்கு போன் செய்து தகவலும் தெரிவிக்கிறார்.
ஆனால் ப்ரீத்தி வீடு சென்று சேரவில்லை.
அடுத்த நாள் காலை ஓர் இளம் பெண் கொலையுண்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கிறது.
திடீரென தலை மறைவான ஆட்டோ டிரைவர் ஒருவரின் ஆட்டோவில் இருந்த ரத்த கறைகள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆட்டோ டிரைவர் தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த உணவு டெலிவரி செய்யும் கதிரேசன் என்ற இளைஞன் தான் ஒரு கொலை செய்து விட்டதாக சொல்லி போலீசில் சரணடைய வருகிறான்.
விசாரணையின்போது தான் கொன்ற பெண் ப்ரீத்தியா இல்லையா என்று தனக்குத் தெரியாது என்றும் புகைப்படத்தை பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றும் கூறுகிறான்.
மேலும் அவன் இதற்கு முன் இரண்டு கொலைகள் செய்திருப்பதாகவும் கூறுகிறான்.
ஆனால் போலீஸ் விசாரணையில் அவன் கொலை செய்ததாக குறிப்பிடும் மற்ற இரண்டு பேரும் உயிரோடு இருப்பது தெரிய வருகிறது.
செய்யாத கொலையை செய்ததாக அவன் கூறுவதற்கு காரணம் என்ன? உண்மையில் ப்ரீத்தி எங்கு போனாள்? என்ன ஆனாள்? என்ற புதிர்களுக்கு எல்லாம் விடை பிற்பகுதியில் இருக்கிறது.
போலீஸ் அதிகாரியையும் நீதிபதியையுமே அங்கிள் என்று அழைத்து, அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசுவதிலாகட்டும், வெறி கொண்டு துண்டு துண்டாக உடலை வெட்டுவதாகட்டும், நாயகன் தருண் விஜய் புதுமுகத்தை போலவே தெரியவில்லை. பண்பட்ட நடிகரைப் போல் திறம்பட நடித்திருக்கிறார்.
ஒரு பெண் காணாமல் போகும் காட்சியில் சாதாரணமாக தொடங்கும் திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு புல்லட் ரயில் வேகத்தில் விறுவிறுப்பாக பயணிக்கிறது.
பின்பகுதியில் வரும் காட்சிகள் பலவும் சற்றும் யூகிக்க முடியாத வகையில் அமைந்த எதிர்பாராத திருப்பங்கள்.
கரண் பிரபாவின் பின்னணி இசை சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு தேவையான பணியை சிறப்பாக செய்திருக்கிறது.
ஹேசன் வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
போலீஸ் அதிகாரி மதுசூதனன் உண்மையான கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பது உட்பட சிலவற்றை சரியான முறையில் சொல்ல தவறிவிட்டார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்.
சஸ்பெண்ஸ் திரில்லர் வகை படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு குற்றம் புதிது பெயரளவில் தான் புதிது ஆக இருக்கும்.


