![]()

விஜய் ,திரிஷா,சஞ்சய்தத்,அர்ஜுன் ,கெளதம் வாசுதேவன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் ரசிகராகவே மாறி முழுக்க முழுக்கவிஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உருவாக்கியிருக்கிறார்.
விஜய் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக அதிலும் நடுத்தர வயது கதாபாத்திரம் ஏற்று நடிப்பது இதுவே முதல்முறை. பாத்திரத்தை உள்வாங்கி முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்.
சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூரலிகான் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு சிறிய வேடம் என்றாலும் ஏற்ற பாத்திரத்திற்க்கு நியாயம் செய்து நடித்திருப்பது சிறப்பு. (விதி விலக்கு மிஷ்கின்)
நேரில் பார்த்தால்கூட இமாசல பிரதேசம் இந்த அளவு அழகாக இருக்குமா என்று தெரியவில்லை. DOP மனோஜ் பரமம்சா இமாசல பிரதேசத்தின் அவ்வளவு அழகையும் தன் கேமராவில் அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத். வழக்கம்போல் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார்.
போதை பொருள் தொழில் செய்யும் கேங்ஸ்டர் மகிழச்சியை கொண்டாட அரை குறை அடையணிந்த அழகிகளுடன் ஆட்டம் போடும் காட்சிகளைத்தானே படங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் லியோ படத்தில் வரும் இது போன்ற சிச்சுவேஷனில், அரசியலுக்கு வரத தயார் எனத் தெரிவிக்கும் வகையில் விஜய் “நான் ரெடிதான் வரவா…?” என்று பாடி ஆடுகிறார்.
பொதுவாக எல்லா பெற்றோர்களும் தாங்கள் சம்பாதிக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் தங்கள் வாரிசுகளுக்குத்தான் என்றுதானே நினைப்பார்கள்.
தனது மகனை நரபலி கொடுத்து அதில் செல்வம் சேர்க்க எந்த தகப்பனும் நினைக்க மாட்டான். ஆனால் பெற்ற வாரிசையே பலி கொடுக்க துணிந்த ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதில் சஞ்சய் தத்தை நடிக்க வைத்து புதுமை (?) படைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
போதைப் பொருள் பழக்கம் மக்களை சீரழிக்கும் என்ற ஞானோதையம் வந்ததால் விஜய் மனம் மாறிய மைந்தனாகவில்லை. சகோதரியை கொன்றுவிட்டதால் அந்தக் கூட்டத்திலிருந்து விலகி புதிய வாழ்க்கை வாழ்வதாகக் காட்டியிருப்பது நாயக பிம்பத்தையே நீர்த்துப் போகச் செய்கிறது.
இது விஜய் படமல்ல லோகேஷ் கனகராஜ் படம்.லோகேஷ் ஒவ்வொரு படத்திலும் முந்தைய படங்களின் தொடர்பை இந்த படத்திலும் கொண்டுவருது வழக்கம்.இதிலும் கைதி,விக்ரம் தொடர்பை கொண்டுவருகிறார்.
குறிப்பாக படத்தில் இறுதி காட்சியில் கமல் குரலுக்கும் விக்ரம் பாடலுக்கும்அரங்கம் அதிர கைதட்டல்கள் காதைப் பிளக்கின்றன.
மூளையைக் கழற்றி முதுகுக்கு பின்னால் வைத்துக் கொண்டால் வேண்டுமால் லியோ படத்தை பார்த்து ரசிக்கலாம்.

