Thursday, October 29

லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்

Loading

லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்

செவி வழி சொல்லப்படும் நாட்டுப்புறக் கதை ஒன்றை, நவீன காலத்துக்கு கொண்டு வந்து அட்டகாசமான தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் ‘லோகா’.

பெங்களூருவில் தன் நண்பர்களுடன் வசிக்கிறார் நஸ்லன்.

அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் குடி வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

அவருடன் பழக ஆசைப்படும் நஸ்லன், நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்க, கல்யாணியும் அதை ஏற்றுக் கொண்டு பார்ட்டிக்கு வருகிறார்.

அந்தப் பார்ட்டியில் போதைப் பொருட்கள் புழங்குவதாகச் சொல்லி சோதனை நடத்துவதற்கு வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி (மாஸ்டர்).

நஸ்லன், கல்யாணி மற்றும் நண்பர்களுடன் இன்ஸ்பெக்டர் சாண்டிக்கு ஏற்படும் உரசல் பெரிதாகிக் கொண்டே போகிறது.

அதே சமயம் நஸ்லன் _கல்யாணி நட்பும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது.

கல்யாணியிடம் சில ஆச்சரியமான சக்திகளும், அபூர்வமான நடவடிக்கைகளும் இருப்பதை கண்டு திகைக்கிறார் நஸ்லன்.

உண்மையில் கல்யாணி யார்?
அவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார்?

அவரிடம் உள்ள அபூர்வமான சக்தி என்ன? இவற்றை எல்லாம் தேர்ந்த சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் நேர்த்தியாக திரையில் சொல்லப்பட்டிருக்கும் படம்தான் ‘லோகா சேப்டர் ஒன் சந்திரா’.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு குறித்து ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அபாரம்.

துவக்க காட்சியில் வரும் பெங்களூர் வீதிகள் ஏதோ வெளிநாட்டு வீதிகளைப்போல நியான் சைன்களில் ஜொலிக்கச் செய்து அசத்தி இருப்பது கேமராமேன் திறமைக்கு சான்று.

ஒளிப்பதிவுடன் கைகோர்த்து படத்தை அடுத்த உயரத்துக்கு இட்டுச் செல்வது ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை என்றால் மிகையாகாது.

அமைதியான இளம் பெண்ணாகும், அநீதிக்கு எதிரான ஆக்ரோஷமான அவதாரத்திலும் முத்திரை பதிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷின்.

மொத்த படத்தையும் இயக்குனர் இயக்குனர் டொமினிக் அருண் தன் தோளிலேயே சுமத்தி இருந்தாலும் அதை மிக எளிதாகவும் அழகாகவும் செய்து, படத்துக்கு மெருகூட்டியிருக்கிறார்கல்யாணி பிரியதர்ஷன்.

பிளாஷ்பேக்கில் வரும் நீலியின் கதை மனதை கனக்கச் செய்கிறது.

மிரட்டலான வில்லன் வேடத்தில் முத்திரை பதிக்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார் சாண்டி மாஸ்டர்.

மனித உறுப்புகள் திருட்டு என்று ஆரம்பிக்கும் கதை, பின்னர் கொஞ்சம் கூட அதை கண்டு கொள்ளாமல் வேறு ஏதோ போக்கில் செல்வது ஏன் என்று தெரியவில்லை.

ஆயினும் துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும் இந்த வித்தியாசமான திரைப்படம், மாறுபட்ட திரை அனுபவத்தை தருகிறது என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5/5