![]()

எளிமையான கவிதையைப் போல் அழகாக தொடங்குகிறது பரத் வாணி போஜன் இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு.
திருமணம் செய்து கொள்வதற்காக தன் தந்தை ராதாரவி ஏற்பாடு செய்த பரத்தை பார்ப்பதற்காக ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு வருகிறார் வாணி போஜன். முதல் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப் போய்விட திருமணத்தில் முடிகிறது
திருமண சீராக மகளுக்கு ராதாரவி வாங்கித் தரும் வீட்டை கூட ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டும் அளவுக்கு சுயமரியாதை மிக்கவராக இருக்கிறார் பரத்.
வியாபாரத்தில் வெற்றி பெற்ற பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பரத் நினைக்கிறார்.
தாம்பத்திய வாழ்க்கையில் வாணி போஜன் கர்ப்பமடைந்து இருப்பதை டாக்டர் உறுதிப்படுத்துகிறார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வீட்டுக்கு வரும் வாணி போஜன், பரத் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கோபமடைகிறார்.
இதனால் ஏற்படும் வாக்கு வாதம் சண்டையில் முடிகிறது. வாணி போஜனை பரத் தள்ளி விட அவர் சுவரில் மோதி காயமடைந்து இறந்து போகிறார்
பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று பரத் திட்டமிட்டு கொண்டிருக்கும்போது பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். நிலைமை புரியாமல் சரக்கு அடித்துக் கொண்டே சகஜமாக சம்பாஷனை செய்து பரத்திற்கு தொடர்ந்து இம்சைகளை கொடுக்கிறார்.
இதேபோல் மற்றொரு நண்பரான டேனியல் ஆனி போப், பரத் வீட்டுக்கு தன் பெண் தோழியை அழைத்து வந்து சற்று நேரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ஆரம்பத்தில் சாதாரணமாக பரத் இருந்தாலும் போகப்போக நண்பர்களின் தொந்தரவு அதிகமாக அவர்களை வெளியேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் நண்பர்களுக்கு வாணி போஜனை பரத் கொலை செய்திருப்பது தெரிய வருகிறது.
விவேக் பிரசன்னா பிரேதத்தை மறைக்க உதவி செய்ய முன்வர, டேனியலோ இந்த பிரச்சனையிலிருந்து சிக்காமல் விலகிச் செல்ல விரும்புகிறார்.
இந்த சமயத்தில் காலிங் பெல் அடிக்கவே கதவை திறந்து பார்த்தால் அங்கே வாணி போஜன் நிற்கிறார்.
இறந்து போன வாணி போஜன் இப்போது மீண்டும் எப்படி வந்தார்? இப்படி சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக செல்கிறது லவ்.
முக்கியமான நான்கு கதாபாத்திரங்கள். அதுவும் ஒரே ஒரு அறையிலேயே முழு படமும் நடைபெறுகிறது.
ஆனாலும் எந்த இடத்திலும் சற்றும் போர் அடிக்காதது படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் .
பி ஜி முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. ரோனி ரெஃப்ளின் இசையும் அஜயின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது
படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே வாணி போஜன் இறந்துவிட, அப்போதே படம் முடிந்து விட்டது போல் தோன்றினாலும் பார்வையாளர்களை படத்துக்குள் நிறுத்தி வைத்திருக்கும் இயக்குனர் ஆர்பி பாலா பாராட்டுக்குரியவர்.
வியாபாரத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த பரத் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கோபமடைந்து பரத்துடன் சண்டை போடும் காட்சிகளில் ஆவேசமான நடிப்பை கொ(கா)ட்டியிருக்கிறார் வாணி போஜன்.
பரத் வாணி போஜன் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
வித்தியாசமான படங்களையும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களையும் விரும்புவார்களை லவ் படம் கவரும் என்பதில் ஐயமில்லை
மதிப்பெண் 3/5
